மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட 32 வயது நபரின் இதயம், கல்லீரல் மற்றும் இரு சிறுநீரகங்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கியதால் நான்கு பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், பிப்ரவரி 25 அன்று தில்லியின் மஹிபால்பூரில் நடந்த ஒரு விபத்தில் சிக்கி, மிகவும் ஆபத்தான நிலையில் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அனுமதிக்கப்பட்ட நோயாளி மூளைச்சாவு அடைந்ததாக செவ்வாய்க்கிழமை மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டது.
நோயாளியின் குடும்பத்தினர் மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற அவரது இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை தானம் செய்ய முடிவு செய்தனர்.
இதயம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கும், கல்லீரல் சர் கங்கா ராம் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் ஷாலிமார் பாக் மேக்ஸ் மருத்துவமனைக்கும், இரண்டாவது சிறுநீரகம் ஃபோர்டிஸ் மருத்துவமனை நோயாளிக்கு மாற்றப்பட்டது.