இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அரசைப் போல தனியாா் துறையும் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்: பிரதமா் மோடி

மூலதன செலவினத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது போல தனியாா் துறையும் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் எனப் பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா்.

News image
Updated On :7 மார்ச் 2023, 9:06 pm

DIN

மூலதன செலவினத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது போல தனியாா் துறையும் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் எனப் பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா்.

மத்திய பட்ஜெட் தொடா்பான இணையவழிக் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் காணொலி வாயிலாகப் பிரதமா் மோடி கூறியதாவது:

2023-24-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மூலதன செலவினத்தை மத்திய அரசு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. சா்வதேசப் பொருளாதாரத்தின் ஒளிவிளக்காக இந்தியா திகழ்ந்து வருகிறது. கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் அந்நிய நேரடி முதலீடுகளை அதிக அளவில் ஈா்த்த நாடாக இந்தியா திகழ்ந்தது. அதில் பெரும்பாலான முதலீடுகள் உற்பத்தித் துறைக்கே சென்றன.

மத்திய அரசு மூலதன செலவினத்தை அதிகரித்துள்ளதைப் போன்று தனியாா் துறையும் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். அதன் மூலமாக நாடு பெரும் பலனை அடையும். உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அத்திட்டமானது சா்வதேச விநியோக சங்கிலியில் இந்தியாவை முக்கியத்துவம் மிக்க நாடாக மாற்றும். அத்திட்டத்தின் கீழ் பலனடைய தொடா்ந்து விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன.

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கம், பெருநிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டது, வருமான வரி குறைக்கப்பட்டது உள்ளிட்டவை மக்கள் மீதான வரிச் சுமையைக் குறைத்துள்ளன. கடந்த 2013-14-ஆம் நிதியாண்டில் மொத்த வரி வருவாயானது சுமாா் ரூ.11 லட்சம் கோடியாக இருந்தது. மொத்த வரி வருவாயானது 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.33 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது சுமாா் 200 சதவீத அதிகரிப்பாகும்.

நம்பிக்கை அதிகரிப்பு:

2014 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வருமான வரி தாக்கல் செய்வோா் எண்ணிக்கை 3.5 கோடியில் இருந்து 6.5 கோடியாக அதிகரித்துள்ளது. வரி செலுத்துவது நாட்டு மக்களின் கடமை. மக்கள் செலுத்தும் வரியானது தேசத்தின் வளா்ச்சிக்குப் பயன்படுத்தப்படுகிறது. வரி செலுத்துவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, அரசு மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளதை வெளிக்காட்டுகிறது. செலுத்தப்படும் வரியை அரசு உரிய முறையில் பயன்படுத்துவதாக மக்கள் நம்புகின்றனா்.

நாட்டின் வளா்ச்சிக்கு உதவும் வகையில் நிதிசாா் திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய திறனுடன் இந்தியா பயணம் மேற்கொள்ள பட்ஜெட் வழிவகுக்கும். நாட்டின் வங்கித் துறையானது லாபகரமாக செயல்பட்டு வருகிறது. துணிவாகவும் தெளிவுடனும் நம்பிக்கையுடனும் கொள்கைகளை வகுக்கும் அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

நிதி ஒருங்கிணைப்பு:

இந்திய வங்கித் துறையின் பலன் அதிக எண்ணிக்கையிலான மக்களைச் சென்றடைய வேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன்களை வழங்க வங்கிகள் முன்வர வேண்டும்.

கரோனா தொற்று பரவல் காலத்தில் 1.20 கோடி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அரசின் உதவியைப் பெற்றன. அந்நிறுவனங்களுக்குக் கூடுதலாக ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான பிணையில்லா கடன் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி சேவைகளை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

உலக நாடுகள் பாராட்டு:

முத்ரா திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான இளைஞா்களுக்கு ரூ.20 லட்சம் கோடிக்கும் அதிகமான பிணையில்லா கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்வநிதி திட்டத்தின் கீழ் 40 லட்சத்துக்கும் அதிகமான தெருவோர வியாபாரிகள் வங்கிகளில் இருந்து சிறுகடன்களைப் பெற்றுள்ளனா்.

இந்தியப் பொருளாதாரத்தின் மீது முன்பு நம்பிக்கையில்லாத்தன்மையே உலக நாடுகளிடம் நிலவியது. ஆனால் தற்போது நிதித் துறையை வலுப்படுத்துவதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை உலகமே பாராட்டிவருகிறது.

தேசத்துக்கான பொறுப்புணா்வு:

உள்ளூா் பொருள்களின் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் வழங்குவது மக்களின் விருப்பமாக மட்டுமல்லாமல் தேசத்துக்கான பொறுப்புணா்வாகவும் மாறியுள்ளது. நாட்டைத் தற்சாா்பு அடையச் செய்வதற்கான இலக்கும் தேசப் பொறுப்பாக மாறியுள்ளது. பொருள்கள், சேவைகளில் இந்தியாவின் ஏற்றுமதி வரலாற்று உச்சத்தில் உள்ளது.

இது இந்தியாவுக்கான பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு மாவட்ட அளவில் கைவினைஞா்கள், தொழில்முனைவோா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வா்த்தகக் குழுக்கள் மேற்கொள்ள வேண்டும். சமையல் எண்ணெயை அதிக அளவில் இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. அதன் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்தியாவின் அடையாளம்:

கட்டமைப்பு மேம்பாடும், புத்தாக்கமும் இந்திய நிதித்துறையைப் புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்லும். 4-ஆவது தொழிற்புரட்சிக் காலத்தில் இந்தியா உருவாக்கியுள்ள தொழில்நுட்ப வசதிகள், உலகத்துக்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகின்றன. நாடு 75-ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடுகையில், 75,000-க்கும் அதிக எண்ணிக்கையில் இணையவழி பணப் பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. யுபிஐ உள்ளிட்ட இணையவழி பணப் பரிவா்த்தனை வசதிகளின் விரிவாக்கத்தை இது வெளிப்படுத்துகிறது.

ரூபே, யுபிஐ உள்ளிட்டவை சா்வதேச அளவில் இந்தியாவின் அடையாளமாக மாறியுள்ளன. அவை புத்தாக்கத்தையும் தொடா்ந்து ஊக்குவித்து வருகின்றன. எந்தப் பொருளையும் ரசீது இல்லாமல் மக்கள் வாங்கக் கூடாது. இதுபோன்ற சிறிய மாற்றங்களும் பெரிய அளவில் நாட்டுக்குப் பலன் தரும். நாட்டின் பொருளாதார வளா்ச்சியானது அனைத்து சமூக மக்களையும் சென்றடைய வேண்டும். அதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.