வாக்காளர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க புதிய வசதி அறிமுகம்: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்

80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 11) தெரிவித்துள்ளது
வாக்காளர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க புதிய வசதி அறிமுகம்: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்
Published on
Updated on
2 min read

80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 11) தெரிவித்துள்ளது.

இந்த வசதியை 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் முறையாக தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் குமார் கூறியதாவது: எங்களது குழு படிவம் 12-டி உடன், 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று அவர்களது வாக்கினை சேகரிப்பர். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் நேரடியாக வந்து அவர்களது வாக்கினை செலுத்த தேர்தல் ஆணையம் ஊக்குவிக்கிறது. இருப்பினும், வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்கினை செலுத்த இயலாதவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி தங்களது வாக்கினை செலுத்தலாம். இந்த புதிய வசதியில் வாக்காளர்களின் வாக்கு செலுத்தும் ரகசியம் பாதுகாக்கப்படும். மேலும், அவர்கள் வாக்கு செலுத்தத் தொடங்கியது முதல் அந்த செயல் முடியும் வரை அனைத்தும் விடியோக்களாக பதிவு செய்யப்படும்.

வீடுகளுக்குச் சென்று வாக்கினைப் பெற செல்லும் போது ஒவ்வொரு முறையும் அனைத்துக் கட்சிகளுக்கும் தகவல் கொடுக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்காக ’சக்ஸம்’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த செயலியின் உள் நுழைந்து தங்களது விவரங்களை அளித்தபின் வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்தலாம். அதேபோல வேட்பாளர்களுக்காக ‘சுவிதா’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யலாம்.

இந்த செயலியைப் பயன்படுத்தி வேட்பாளர்கள் அரசியல் கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு அனுமதி பெறலாம். இந்தியத் தேர்தல் ஆணையம் ‘உங்களது வேட்பாளர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை வாக்களார்கள் பயன்பெறும் வகையில் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் அவர்களது இணையதளப் பக்கத்திலும், சமூக ஊடக கணக்கிலும் அவர்கள் முன்னிறுத்தும் வேட்பாளர்கள் குறித்து தெரிவிக்க வேண்டும். குற்றப் பின்னணி உள்ள ஒருவருக்கு தேர்தலில் போட்டியிட அவர்கள் ஏன் வாய்ப்பு வழங்குகிறார்கள் என்பதைத் தெரிவிக்க வேண்டும். 

கர்நாடக சட்டப் பேரவையில் உள்ள 224 தொகுதிகளில் 36 தொகுதிகள் பட்டியலினத்தவர்களுக்கும், 15 தொகுதிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 2.59 கோடி பேர் பெண் வாக்காளர்கள். 16,976 பேர் நூறு வயது நிரம்பியவர்கள். 4,699 பேர் மூன்றாம் பாலினத்தவர். 9.17 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளவர்கள். 12.15 லட்சம் வாக்காளர்கள் 80 வயதுக்கும் மேலானோர். 5.55 லட்சம் மாற்றுத்திறன் வாக்காளர்கள். மாநிலத்தில் மொத்தம் 58,272 வாக்கு மையங்கள் உள்ளன. அவற்றுள், 24,063 வாக்கு மையங்கள் நகர்ப்புறங்களில் உள்ளன. ஒவ்வொரு வாக்கு மையங்களுக்கும் சராசரியாக 883 வாக்காளர்கள் உள்ளனர்.

29,141 வாக்கு மையங்களில் வெப் கேமராக்கள் பொருத்தப்படும். 1,200 வாக்கு மையங்கள் பதற்றம் நிறைந்த மையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. பள்ளிகளில் அதிக அளவிலான வாக்கு மையங்கள் அமைக்கப்படும். வாக்கு மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை வசதிகள் போன்றன அமைக்கப்படும். அவை தேர்தல் முடிவடைந்த பின்பும் நிரந்தரமாக செயலில் இருக்கும். இது பள்ளிக் குழந்தைகளுக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் அளிக்கும் பரிசாகும். வருகிற மே 24 ஆம் தேதிக்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படலாம். மே 24 ஆம் தேதியுடன் தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடைகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com