அடுத்த விவாகரத்து: சோஹோ நிர்வாகி ஸ்ரீதர் வேம்பு மீது மனைவி குற்றச்சாட்டு

சோஹோ இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு குறித்து அவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வரும் மனைவி பிரமிளா சீனிவாசன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு (கோப்பிலிருந்து)
ஸ்ரீதர் வேம்பு (கோப்பிலிருந்து)

சோஹோ இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு குறித்து அவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வரும் மனைவி பிரமிளா சீனிவாசன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

2020ஆம் ஆண்டு முதலே பிரிந்து வாழ்ந்து வரும் ஸ்ரீதர் வேம்பு மற்றும் பிரமிளா சீனிவாசன் தம்பதி, விவாகரத்து கோரி கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளனர்.

ஃபோர்ப்ஸ் தகவல்படி, ஸ்ரீதர் வேம்புவின் சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான், ஸ்ரீதர் வேம்பு தன்னையும், மருத்துவ உதவி தேவைப்படும் மகனையும் நிர்கதியாக விட்டுவிட்டதாகவும், சோஹோ நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை தன்னிடம் தெரிவிக்காமலேயே ஸ்ரீதர் வேம்பு தனது சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் பெயரில் மாற்றிவிட்டதாகவும் பிரமிளா சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

29 ஆண்டு காலம் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த தனது கணவர் ஸ்ரீதர் வேம்பு, 2020ஆம் ஆண்டு தன்னையும் தனது மகனையும் கைவிட்டுவிட்டதாக கடந்த ஜனவரி மாதம் நீதிமன்றத்தில் அளித்த மனுவில் பிரமிளா குறிப்பிட்டுள்ளார்.  தனக்கும் கணவருக்கும் சொந்தமான சொத்துகளை ஸ்ரீதர் வேம்பு, தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களுக்கு தனது அனுமதியின்றி மாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரமிளா ஸ்ரீநிவாசனின் வழக்குரைஞர் ஜான் ஃபார்லே, இது குறித்துப் பேசுகையில், கலிஃபோர்னியா குடும்ப சொத்துகள் சட்டப்படி, எவர் ஒருவரும் தனது வாழ்க்கைத்துணையின் அனுமதி அல்லது ஒப்புதல் இல்லாமல் தங்களது குடும்பச் சொத்துகளை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது என்பதால்தான், ஸ்ரீதர் வேம்பு சோஹோ நிறுவனப் பங்குகளை சகோதரிக்கும், சகோதரி கணவரின் பெயருக்கும் மாற்றியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்ரீதர் வேம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், எனது குணாதிசயங்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அவதூறுகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய நேரம் இது.

இது ஒரு ஆழமான வேதனையான தனிப்பட்ட அச்சுறுத்தல். எனது தனிப்பட்ட வாழ்க்கை, எனது வணிக வாழ்க்கைக்கு மாறாக, மிக நீண்ட ஒரு சம்பவம். ஆட்டிசம் எங்கள் வாழ்க்கையை அழித்து, என்னை தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மனச்சோர்வடையச் செய்தது.

இந்த துயரமான தனிப்பட்ட வாழ்க்கையைதான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். இப்போது என் உறவினர் ராமின் பொய்கதைகளால், ஒரு மோசமான விஷயம், மேலும் பல குழப்பமான சட்ட பரிமாணங்களுடன் சேர்கிறது.

நான் எப்போதும் பிரமிளாவையும் என் மகனையும் பராமரித்து வருகிறேன், நான் வாழும் வரை அவர்களுக்கு ஆதரவாக இருப்பேன்.

உண்மையும் நீதியும் வெல்லும் என்று நான் நம்புகிறேன். இறுதியாக நான் வேண்டுவது ஒன்றுதான, என்றோ ஒரு நாள், என் அன்புக்குரிய மகன் என்னிடம் வந்து சேர்வார் என்பதுவே என்று பதிவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com