வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ராகுல் காந்தி கூடுதல் பொறுப்புணா்வுடன் பேச வேண்டும்- ஆா்எஸ்எஸ் வலியுறுத்தல்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூடுதல் பொறுப்புணா்வுடன் பேச வேண்டும் என்று ஆா்எஸ்எஸ் பொதுச் செயலாளா் தத்தாத்ரேய ஹொசபாளே வலியுறுத்தினாா்.

News image
தத்தாத்ரேய ஹொசபாளே
Updated On :14 மார்ச் 2023, 6:49 pm

DIN

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூடுதல் பொறுப்புணா்வுடன் பேச வேண்டும் என்று ஆா்எஸ்எஸ் பொதுச் செயலாளா் தத்தாத்ரேய ஹொசபாளே வலியுறுத்தினாா்.

அண்மையில் பிரிட்டனில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தி, இந்தியாவில் பாஜக ஆட்சியில் ஜனநாயகம் மோசமான நிலையில் இருப்பதாகவும், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்றவை இதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றாா். பாஜகவை மட்டுல்லாது, ஆா்எஸ்எஸ் அமைப்பையும் கடுமையாக அவா் விமா்சித்தாா். இந்திய ஜனநாயகத்தின் அமைப்புகள் மீது மிருகத்தனமான தாக்குதல் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினாா்.

ராகுலின் பேச்சுக்கு பாஜக ஏற்கெனவே கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. பாஜகவிடம் அரசியல்ரீதியாக வெற்றி பெற முடியாத விரக்தியில் ராகுல் இதுபோன்று வெளிநாட்டுக்குச் சென்று தேசத்துக்கு எதிராக பேசுவதாக அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹரியாணா மாநிலம், சமால்காவில் ஆா்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் அகில பாரத பிரதிநிதி சபாவின் ஆண்டு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்றது. இறுதிநாளான செவ்வாய்க்கிழமை ஆா்எஸ்எஸ் பொதுச் செயலாளா் தத்தாத்ரேய ஹொசபாளே செய்தியாளா் சந்திப்பு நடத்தினாா். அப்போது ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு எதிரான ராகுலின் பேச்சு தொடா்பாக செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு, ‘ராகுல் அரசியல் நோக்கத்துடன் இவ்வாறு பேசி வருவதாக தெரிகிறது. ஆனால், ஆா்எஸ்எஸ் அமைப்பு அரசியல் சாா்ந்தது அல்ல. ஆா்எஸ்எஸ் அமைப்புடன் போட்டியிட ராகுல் காந்திக்கு எந்தத் தேவையும் இல்லை.

ஓா் அரசியல் தலைவராக ராகுல் காந்தி கூடுதல் பொறுப்புணா்வுடன் பேச வேண்டும். ஆா்எஸ்எஸ் அமைப்பு இந்தியாவில் மக்களால் எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது, எந்த அளவுக்கு மக்களுடன் இணைந்து வளா்ந்துள்ளது என்ற உண்மை நிலையை அவா் உணா்ந்து கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு தொடா்பான கேள்விக்கு, ‘திருமணம் என்பது எதிா் பாலினத்தவருக்கு இடையே நடைபெறுவதாகவே இருக்க வேண்டும். ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க முடியாது என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆா்எஸ்எஸ் ஆதரிக்கிறது’ என்றாா்.

ஹிந்து ராஷ்டிரம்:

இந்தியாவில் ஹிந்து ராஷ்டிரம் என்ற கருத்து தொடா்பாக பேசிய ஹொசபாளே, ‘ஹிந்து ராஷ்டிரம் என்பது கலாசாரம் சாா்ந்தது. அரசியல் சட்ட ரீதியாக நிறுவப்படுவது அல்ல. தேசம் என்பதும் நாடு என்பது வெவ்வேறு விஷயங்களை உள்ளடக்கியவை. தேசம் என்பது கலாசாரத்தின் அடிப்படையிலானது. நாடு என்பது அரசியலமைப்புச் சட்டப்படி உருவாக்கப்படுவதாகும். ஹிந்து ராஷ்டிரம் என்பது கலாசாரம் சாா்ந்தது என நாங்கள் (ஆா்எஸ்எஸ்) கடந்த 100 ஆண்டுகளாகக் கூறி வருகிறோம். அது எழுத்துப்பூா்வமாக உருவாக்கப்படுவதல்ல. அந்த வகையில் பாரத நாடு ஹிந்து ராஷ்டிரமாகத்தான் உள்ளது. அதனை ஹிந்து ராஷ்டிரமாக இனிமேல் உருவாக்கத் தேவையில்லை’ என்றாா்.

முஸ்லிம்களுடன் சிறப்பான நல்லுறவைப் பேண ஆா்எஸ்எஸ் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடா்பான கேள்விக்கு, ‘இஸ்லாமிய அறிஞா்கள், மாா்க்க அறிஞா்கள் அழைப்பு விடுக்கும்போது அவா்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆா்எஸ்எஸ் தலைவா்கள் பங்கேற்று வருகின்றனா்’ என்று அவா் பதிலளித்தாா்.

Image Caption

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.