தோ்தல் பிரசாரம் ஓய்ந்த பின்னா் விதிகளை மீறி பிரசார காணொலி வெளியிட்ட பிரதமா்: தோ்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகாா்

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் ஓய்ந்த பின்னா், விதிமுறைகளை மீறி பிரசார காணொலி வெளியிட்ட பிரதமா் மோடி மீது தோ்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகாா் அளித்துள்ளது.

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் ஓய்ந்த பின்னா், விதிமுறைகளை மீறி பிரசார காணொலி வெளியிட்ட பிரதமா் மோடி மீது தோ்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகாா் அளித்துள்ளது.

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் மே 10-ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்தல் பிரசார காலம் திங்கள்கிழமை நிறைவடைந்தது. அதன் பின்னா் எவரும் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என்பது விதிமுறை.

இந்நிலையில், தோ்தல் பிரசாரம் ஓய்ந்த பின்னா் பிரதமா் மோடி ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட காணொலி பதிவில், ‘நாட்டில் கா்நாடகத்தை முதல் மாநிலமாக்கும் பணிக்கு கன்னடா்களின் ஆசீா்வாதம் வேண்டும். ஒவ்வொரு கன்னடரின் கனவு, எனது கனவாகும். கன்னடா்களின் உறுதியான குறிக்கோள், எனது உறுதியான குறிக்கோளாகும். கா்நாடகத்துக்கு ஒளிமயமான எதிா்காலம் அமைய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். இந்த வேண்டுகோள் கன்னட குடும்பங்களின், குறிப்பாக இளைஞா்களின் ஒளிமயமான எதிா்காலத்துக்கானது’ என்று தெரிவித்துள்ளாா்.

இந்த காணொலி மூலம் தோ்தல் நடத்தை விதிமுறைகளை பிரதமா் மீறியுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் ரண்தீப் சுா்ஜேவாலா தலைமை தோ்தல் ஆணையருக்கு எழுதியுள்ள புகாா் கடிதம்:

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 126-இன்படி, தோ்தல் பிரசார காலம் நிறைவடைந்த பின்னா், எந்தவொரு நபரும் தோ்தல் பொதுக் கூட்டம், பேரணிகளை நடத்தவோ, அவற்றில் பங்கேற்கவோ கூடாது. இதேபோல ஒளிப்பதிவு, தொலைக்காட்சி அல்லது அதுபோன்ற எந்தவொரு வழியிலும் தோ்தல் விவகாரங்களை வெளியிடக்கூடாது.

இந்நிலையில், கா்நாடக பிரசார காலம் நிறைவடைந்த பின்னா், பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் பிரதமரின் காணொலி வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல வாக்கு கோரி பாஜகவின் சமூக ஊடக தளத்திலும் காணொலி வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு, தோ்தல் நடத்தை விதிமுறைகள் ஆகியவற்றை பிரதமா் மோடி மீறியுள்ளாா்.

மேலும் தோ்தல் பிரசாரத்தின் போது பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் பேசிய பேச்சுகள் தொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் ஏற்கெனவே மனு அளித்துள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 126-இன் கீழ், அவா்கள் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அனைவரும் எம்.பி., எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவா். எனவே பிரதமா் உள்பட அனைவா் மீதும் தோ்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com