டாஸ்மாக் மது வணிகத்தில் செய்யப்படும் கலால் வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி ஏய்ப்பு தடுத்து நிறுத்தப்பட்டிருந்தால், அது அரசின் கலால் மற்றும் விற்பனை வரி வசூலில் எதிரொலித்திருக்கும். ஆனால், அவ்வாறு தெரியவில்லை. கடந்த 2021-22ஆம் ஆண்டில் கலால் வரி ரூ.8236.60 கோடி, மதிப்புக் கூட்டு வரி ரூ.27,814.05 கோடி என மொத்தம் ரூ.36,050.65 கோடி மதுவணிகத்தின் மூலம் வருவாயாக கிடைத்தது. கலால் வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி ஏய்ப்பு தடுக்கப்பட்டிருந்தால், மது வணிகத்தின் மூலமான வருவாய் 2022-23ஆம் ஆண்டில் ரூ.72,000 கோடியாக அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், 2022-23ஆம் ஆண்டில் மது வணிகத்தின் மூலமான வருவாய் ரூ.44,098 கோடி மட்டும் தான். கலால் வரி உயர்வு காரணமாக மதுப்புட்டிகளின் விலை அதிகரிக்கப்பட்டதும், டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகளின் எண்ணிக்கை 553 ஆக அதிகரிக்கப்பட்டதால் மது விற்பனை உயர்ந்ததும் தான் வருவாய் அதிகரிக்க காரணமே தவிர, வரி ஏய்ப்பு தடுக்கப்பட்டது அல்ல.