நீதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர்கள் மக்களுக்கு எதிரானவர்கள்: பாஜக

நீதி ஆயோக் கூட்டத்தினை புறக்கணித்த மாநில முதல்வர்கள் அனைவரும் மக்களுக்கு எதிரானவர்கள் எனவும், பொறுப்பற்றவர்கள் எனவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
நீதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர்கள் மக்களுக்கு எதிரானவர்கள்: பாஜக
Published on
Updated on
1 min read

நீதி ஆயோக் கூட்டத்தினை புறக்கணித்த மாநில முதல்வர்கள் அனைவரும் மக்களுக்கு எதிரானவர்கள் எனவும், பொறுப்பற்றவர்கள் எனவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

நாட்டின் மிக உயரிய கொள்கை உத்திகளை வகுக்கும் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

இதில், சுகாதாரம், திறன் மேம்பாடு, பெண்கள் முன்னேற்றம், உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற நீதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா, தில்லி, பஞ்சாப், கர்நாடகம், பிகார், ராஜஸ்தான், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கவில்லை. 

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கலந்துகொள்ளவில்லை என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும், மத்திய அரசின் அவசரச் சட்டத்தினால் புறக்கணிப்பதாக அரவிந்த் கேஜரிவாலும், வெளிநாடு பயணத்தினால் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நீதி ஆயோக் கூட்டத்தினை புறக்கணித்த மாநில முதல்வர்கள் அனைவரும் மக்களுக்கு எதிரானவர்கள் எனவும், பொறுப்பற்றவர்கள் எனவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது: நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்குவது நீதி ஆயோக் அமைப்பு. இந்த 8-வது நீதி ஆயோக் கூட்டத்தில் கிட்டத்தட்ட 100 பிரச்னைகள் விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், 8 மாநிலங்களின் முதல்வர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. முதலமைச்சர்கள் அரவிந்த் கேஜரிவால், பகவந்த் மான், மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார், மு.க.ஸ்டாலின் மற்றும் கே.சந்திரசேகர் ராவ் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

உடல்நலம் சம்பந்தப்பட்ட காரணங்களால் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் வரவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. அவர் சார்பாக யாரும் கலந்துகொள்ளவில்லை. 100 முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்படவுள்ளதாக கூறியிருந்த நிலையிலும் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன்? இது போன்று அதிக அளவிலான மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர்களது மாநிலங்களின் குரலை அவர்கள் கொண்டுவரவில்லை. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. மக்களுக்கு எதிரானது மற்றும் பொறுப்பற்ற செயல். இந்த மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் அந்தந்த மாநிலங்களின் மக்கள் நேரடியாக பாதிப்படைய போகின்றனர். மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கக் கூடாதா?பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை எவ்வளவு தூரம் எடுத்து செல்வீர்கள். பிரதமரை எதிர்ப்பதற்கு உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். ஏன் உங்கள் மாநில மக்களின் நலனுக்கு நீங்களே தீங்கு விளைவிக்கிறீர்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com