பிரதமரின் தொகுதியிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

பிரதமரின் தொகுதியிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் பெண்கள் பாதுகாப்பாக நடப்பதற்கு கூட வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
Published on

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்தத் தொகுதியான வாரணாசியில் பெண்கள் அவர்கள் பயிலும் கல்வி வளாகத்தில் நடப்பதற்கு கூட பாதுகாப்பில்லை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார். 

ஐஐடி மாணவி ஒருவர் அவர் பயிலும் வாரணாசி ஐஐடி வளாகத்தில் வைத்தே, மூன்று ஆண்களால் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார். 

நவம்பர் 2 அன்று இரவில் ஒரு மாணவி ஐஐடி வளாகத்திற்குள் நடந்து சென்றபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அந்த மாணவியை இழுத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். அந்த மாணவியை தவறான கோணங்களில் விடியோ எடுத்து வைத்துக்கொண்ட அவர்கள் இதை வெளியில் சொல்லக்கூடாது என்று அந்த மாணவியை மிரட்டியுள்ளனர். 

அதையடுத்து அந்த மாணவி வாரணாசியின் லங்கா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே நாட்டின் உயர்ந்த கல்வி நிலையங்களுள் ஒன்றான ஐஐடி வளாகத்திற்குள்ளேயே மாணவிக்கு நடந்த கொடுமையை அறிந்த சக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

அதைத் தொடர்ந்து பிரிவு 354 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவேண்டும், ஐஐடி வளாகத்தில் போதிய பாதுகாப்பின்மை ஆகியவற்றை முன்வைத்து மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனைக் குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “ஐஐடி வளாகத்தினுள் வைத்தே ஒரு மாணவி பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார். அதனைக் குற்றவாளிகள் விடியோ பதிவும் செய்துள்ளனர். நாட்டின் உயர்ந்த கல்வி நிலையங்களாக உருவாக்கப்பட்ட ஐஐடி-க்கள் தற்போது பாதுகாப்பு அற்றவையாக மாறி வருகின்றனவா? 

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் மாணவிகள் தங்கள் கல்வி நிலையத்திற்குள் கூட சுதந்திரமாக நடக்க முடியாத சூழல் நிலவுகிறது.”என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com