
காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு தில்லி அரசு புதன்கிழமை பள்ளிகளுக்கு நவம்பர் 9 முதல் 18-ஆம் தேதி வரை குளிர்கால விடுமுறையை அறிவித்துள்ளது.
"அனைத்து பள்ளிகளும் நவம்பர் 9 முதல் நவம்பர் 18 வரை குளிர்கால விடுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்று தில்லி கல்வித் துறை வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தில்லியில் நிலவும் கடுமையான காற்றின் தரம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் இதுபோன்ற பாதகமான வானிலை இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனால் பள்ளிகள் முழுவதுமாக மூடப்பட்டு குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் இருதரப்பினரும் வீட்டில் இருக்க முடியும். இந்தத் தகவலை உடனடியாக பெற்றோருக்கு தெரிவிக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காற்று மாசுபாடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கிய அறிவுரைகளை பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக, தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தலைமையில் அனைத்து துறைகளின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அதையடுத்து பேசிய அமைச்சர் கோபால் ராய், “மாசுபாட்டைக் குறைப்பதற்கு கூட்டுப் பணி இருக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து முறையிட்டு வருகிறேன். தில்லியில் சுற்றுசூழல் விதிகளைக் கடுமையாக அமல்படுத்தி வருகிறோம். ஆனால், அண்டை மாநில அரசுகளும் அதுபோல நடவடிக்கை எடுக்க வேண்டும். தில்லியைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களில் பட்டாசுக்கு தடை விதிக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன். அறிக்கைகள் மூலம் மட்டுமே காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பா.ஜ.க விரும்புகிறது." என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.