சஹாரா குழும நிறுவனர் சுப்ரதா ராய் காலமானார்

சஹாரா குழுமத்தின் நிறுவனர் சுப்ரதாராய்(75) மும்பையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
சஹாரா குழும நிறுவனர் சுப்ரதா ராய் காலமானார்


மும்பை: சஹாரா குழுமத்தின் நிறுவனர் சுப்ரதாராய்(75) மும்பையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.

இதுகுறித்து சஹாரா குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், தொலைநோக்கு பார்வையாளரான சஹாரா குழும தலைவரும், தொலைநோக்கு பார்வையாளருமான சுப்ரதா ராய் பல்வேறு உடல்நல கோளாறுகளால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 12 -ஆம் தேதி அவருடைய உடல்நலம் மோசமடைந்ததை அடுத்து கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு உள்பட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் உயிர்பிரிந்தது என தெரிவித்துள்ளது. 

அவரது மறைவு சஹாரா இந்தியா அமைப்பினருக்கு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் வழிகாட்டியாக, தலைவராகவும் உடன் பணியாற்றுபவர்களுக்கு ஊக்கம் அளிப்பவராகவும் இருந்தவர். அவருடைய இறுதி சடங்குகள் குறித்த விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1948 ஜூன் 10 ஆம் தேதி பிகாரில் உள்ள அராரியாவில் பிறந்த ராய், நிதி, ரியல் எஸ்டேட், ஊடகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, விடுதிகள், சில்லறை வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரந்து விரிந்த ஒரு பரந்த சாம்ராஜ்யத்தை நிறுவிய இந்திய வணிகத் துறையில் ஒரு முக்கிய நபராக இருந்தார்.

கோரக்பூரில் உள்ள அரசு தொழில்நுட்ப நிறுவனத்தில் மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்ற ராய், 1976 -இல் சிட்ஃபண்ட் நிறுவனமான சஹாரா ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மீது கவனம் செலுத்தினார். 1978 இல் அதை சஹாரா இந்தியா பரிவார் என மாற்றினார், பின்னர் இது இந்தியாவின் மிகப்பெரிய கூட்டு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்தது. 

ராயின் தலைமையின் கீழ், சஹாரா பல வணிகங்களாக வளர்ச்சியடைந்தது. இந்த குழு 1992 இல் ராஷ்ட்ரிய சஹாரா என்ற இந்தி மொழி செய்தித்தாளைத் தொடங்கியது, 1990-களின் பிற்பகுதியில் புணேவுக்கு அருகில் ஆம்பி பள்ளத்தாக்கு நகரத் திட்டத்தைத் தொடங்கியது, மேலும் சஹாரா டிவியுடன் தொலைக்காட்சித் துறையில் நுழைந்தது, பின்னர் 'சஹாரா ஒன்' என பெயர் மாற்றியது. 2000 ஆண்டில் லண்டனின் க்ரோஸ்வெனர் ஹவுஸ் ஹோட்டல் மற்றும் நியூயார்க் நகரின் பிளாசா ஹோட்டல் போன்ற சின்னச் சின்ன சொத்துக்களை கையகப்படுத்தியதன் மூலம் சஹாரா சர்வதேச அளவில் தனது வணிகத்தை விரிவுப்படுத்தியது. 

சஹாரா இந்தியா பரிவார் ஒரு காலத்தில் டைம் இதழால் இந்திய ரயில்வேக்கு அடுத்தபடியாக இந்தியாவில் இரண்டாவது பெரிய வேலையளிக்கும் நிறுவனம் என்று பாராட்டப்பட்டது. இந்திய குடும்பங்களில் கணிசமான பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் 9 கோடிக்கும் அதிகமான முதலீட்டாளர்களை கொண்டிருந்தது. 

அவரது வணிக தொழில்கள் வெற்றிநடை போட்டாலும், ராய் சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டார். விதிமுறைகளை மீறி முதலீட்டாளர்களுக்கு 24 ஆயிரம் கோடி வரை முதலீடுகளை திரட்டிய வழக்கில் 2014 ஆம் ஆண்டில், இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்துடனான (செபி) தகராறு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக உச்ச நீதிமன்றம் அவரை காவலில் வைக்க உத்தரவிட்டது. நீண்ட சட்டப் போராட்டத்திற்கு திகார் சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்டார். ராயின் சட்ட சிக்கல்கள் வணிக உலகில் அவரது பங்களிப்புகளை குறைக்கவில்லை. 

கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தின் வணிகத் துறை சார்பாக கௌரவ டாக்டர் பட்டமும், லண்டன் பவர்பிரான்ட்ஸ் ஹால் ஆஃப் ஃபேம் விருதுகளின் வணிக ஐகான் விருது உட்பட பல விருதுகள் மற்றும் கௌரவங்களைப் பெற்றார். இந்தியாவின் சக்திவாய்ந்த நபர்களின் பட்டியலிலும் அவர் தொடர்ந்து இடம்பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com