உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்பு பணிகள் தாமதம் ஆவதால் தொழிலாளர்கள் போராட்டம்

மூன்று நாட்களாக சுரங்கப் பாதையினுள் சிக்கிக் கொண்டிருக்கும் 40 பேரை மீட்பதில் தாமதம் ஆகி வருவதாக கூறி சக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்பு பணிகள் தாமதம் ஆவதால் தொழிலாளர்கள் போராட்டம்

உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கி 3 நாட்களாக உள்ளே இருப்பவர்களை மீட்கும் பணிகள் தாமதம் ஆகிவருவதாக கூறி அவர்களின் குடும்பத்தினர் மற்றும் சக தொழிலாளர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தின் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அந்தப் பாதையின் ஒரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மண் சரிவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு வந்த சுரங்கப்பாதை சரிந்து விபத்துக்குள்ளானது.

பாதை சரிந்து இடிபாடுகள் குறுக்கில் இருப்பதால், அவற்றின் பின்னால் 40 தொழிலாளா்கள் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனா். சரிவுக்குள்ளான பகுதி 30 மீட்டா் நீளமானது என்று மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 

வெளிவரும் பாதையை தயார் செய்வதற்காக இடிபாடுகளை துளையிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் நேற்று மாலை சிக்கிக் கொண்ட நிலையில், மீட்புப் படையினரிடம் வேறு மாற்றுத் திட்டங்கள் கூட இல்லை என்று போராட்டக்காரர்கள் கூறினர். 

இதுகுறித்துப் பேசிய உத்தரகண்ட் மாநில டிஜிபி அசோக் குமார் கூறுகையில், “போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. ராட்சத இயந்திரங்களைப் பயன்படுத்தி இடிபாடுகளை அகற்றி வருகிறோம். ஆனால் இயற்கைத் தடைகளால் செயல்பாடுகள் பாதித்து வருகின்றன. இருப்பினும் உள்ளே சிக்கி இருப்பவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கி வருகிறோம். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

பாதையில் உள்ள இடிபாடுகளை அகற்றினாலும், மேலிருந்து அதிகளவில் மண்சரிவு ஏற்படுவதால் மீட்பு பணிகள் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. 

தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை, இந்தோ-திபெத் எல்லை காவல் படை, எல்லைச் சாலைகள் அமைப்பு, அதிவிரைவுப் படை, சுகாதாரத் துறையைச் சோ்ந்த 160 போ் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இடிபாடுகளில் துளையிட்டு அவற்றுக்குள் பெரிய அளவிலான இரும்புக் குழாயினை செலுத்தி, அவற்றின் வழியாக தொழிலாளா்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. 

முன்னதாக, மாநில பேரிடா் மேலாண்மை துறைச் செயலா் ரஞ்சித் குமாா் சின்ஹா, “தொழிலாளா்களை புதன்கிழமைக்குள் மீட்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com