உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு கபில்தேவ் அழைக்கப்படாதது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம்!

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அழைக்கப்படாதது குறித்து காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் விமர்சித்துள்ளன.
உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு கபில்தேவ் அழைக்கப்படாதது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம்!

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அழைக்கப்படாதது குறித்து காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் ஆகிய கட்சிகள் விமர்சித்துள்ளன.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெற்றது. இதனை நேரில் காண்பதற்கு வராதது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து கபில்தேவ் கூறியதாவது, “போட்டியை நடத்தியவர்கள் என்னை அழைக்கவில்லை. அதனால் நான் நேரில் வரவில்லை. 1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் அனைவருமே இந்தப் போட்டியை நேரில் காணவேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் கடைசிவரை எங்களுக்கு போட்டி அமைப்பாளர்களிடம் இருந்து அழைப்பு வரவில்லை. அவர்களுடைய கடினமான பணிகளுக்கிடையில் ஒருவேளை மறந்திருக்கலாம்.” என்று கூறினார். 

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “இறுதிப்போட்டிக்கு கபில்தேவ் அழைக்கப்படாததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவர் தன்னுடைய கருத்தை தைரியமாக வெளியில் கூறுபவர். சில மாதங்களுக்கு முன்பு நடந்த மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு அவர் ஆதரவு தெரிவித்தார். அதனால் அவரை அழைக்கவில்லையோ எனத் தோன்றுகிறது.” என்று கூறியுள்ளார். 

மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவர் விஜய் வடேத்திவார், “எல்லாவற்றிலும் அரசியல் இருப்பதுபோல, கபில்தேவ் அழைக்கப்படாததற்கு பின்னும் அரசியல் இருக்கிறது.” என்று கூறினார். 

இதுகுறித்து பிசிசிஐ மற்றும் ஐசிசி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிவசேனை கட்சியின் (உத்தவ் தாக்கரே பிரிவு) மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரௌத் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: “இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுதந்த கபில்தேவ் இறுதிப்போட்டிக்கு அழைக்கப்படவில்லை.  இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் அவமதிக்கப்பட்டுள்ளார். இது நாட்டுக்கே அவமானம். நாட்டின் ஆளுங்கட்சி கொடுத்த அரசியல் அழுத்தத்தால் அவரை அழைக்கவில்லையா என்பது குறித்து பிசிசிஐ மற்றும் ஐசிசி விளக்கமளிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை நடைபெற்ற 13 உலகக்கோப்பைத் தொடர்களில் 1983 மற்றும் 2011 ஆகிய இரண்டுமுறை மட்டுமே இந்தியா உலகக்கோப்பையை வென்றுள்ளது. 1983-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com