உத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்பு: முதல்வருடன் பேசிய பிரதமர் மோடி 

உத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணிகள் குறித்து அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.
உத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்பு: முதல்வருடன் பேசிய பிரதமர் மோடி 


உத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணிகள் குறித்து அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் பிரதமர் மோடி திங்கள்கிழமை தொலைபேசியில் உரையாடினார்.

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால் - யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அந்தப் பாதையின் ஒரு பகுதியில் நவம்பர் 12-ஆம் தேதி மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. அதில் 41 தொழிலாளா்கள் சுரங்கப்பாதையின் நடுவில் சிக்கி ஒன்பது நாட்களாக தவித்து வருகின்றனர். அவா்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகளின் பேரிடா் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி சுரங்கப்பாதையினுள் சிக்கி ஒன்பது நாட்களாக தவித்து வரும் 41 தொழிலாளர்களை மீட்பது குறித்தும், செங்குத்தாக துளையிடும் பணிகளின் நிலை பற்றியும் கேட்டறிந்தார். 

இதுகுறித்து உத்தரகண்ட் மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம் தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள். மேலும், 41 தொழிலாளர்களின் மன உறுதியைப் பேண வேண்டியது மிக அவசியம்.” என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அத்தியாவசியப் பொருட்களை உள்ளே அனுப்புவதற்காக செங்குத்தாக துளையிடும் பணிகளை ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம் தொடங்க உள்ளது.

முன்னதாக, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் செயலர் அனுராக் ஜெயின் 41 தொழிலாளர்களை மீட்பதற்கான ஐந்து அம்ச செயல்திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

நவம்பர் 12-ஆம் தேதி அதிகாலையில் சுரங்கப்பாதைக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்க எட்டு நாட்களாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com