பஞ்சாப் : காவல்துறையினர் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி, இரண்டுபேர் காயம்!

பஞ்சாப்பில் உள்ள கபுர்தலா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு காவலர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் : காவல்துறையினர் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி, இரண்டுபேர் காயம்!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கபுர்தலா நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காவலர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இரண்டு காவலர்கள் காயமடைந்துள்ளனர். 

நிஹாங்க்-கள் என அழைக்கப்படும் சீக்கியர்களால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஜாஸ்பல் சிங் எனும் காவலர் கொலை செய்யப்பட்டுள்ளார். சுல்தான்பூர் லோதியில் உள்ள அகல் புங்கா சாஹிப் எனும் குருத்வாராவிலிருந்து, நிஹாங்க் பிரிவினரை போலீசார் வெளியேற்ற முயன்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

காவல்துறை அதிகாரிகள் சாலையில் நின்றுகொண்டிருந்தபோது நிஹாங்க் பிரிவினர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். அவர்கள் சராமாரியாக சுட்டுத்தள்ளியதில் ஒரு காவலர் கொலை செய்யப்பட்டார் எனக் கபுர்தலா தலைமை கண்காணிப்பாளர் தாஜ்பிர் சிங் ஹுன்டால் தெரிவித்துள்ளார். 

மேலும் கண்ணீர் புகைக்குண்டுகள் மூலம் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இரண்டு நிஹாங்க் பிரிவுகள் குருத்வாரா பகுதியைக் கைப்பற்றும் முயற்சியில் சண்டையிட்டுக்கொள்வதாகக் கூறப்படுகிறது. 

பாபா மன் தால் மற்றும் சான்ட் பால்பிர் சிங் ஆகிய இருவர் தலைமையிலான இரண்டு நிஹாங்க் பிரிவுகளும் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஒருவர் மேல் ஒருவர் தாக்குதல் நடத்திக்கொண்டதாகக் காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் காவல்துறையினரால் வழக்கு பதிவுசெய்யப்பட்டு பாபா மன் தால் தலைமையிலான நிஹாங்க் பிரிவினர் 10 பேரைக் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து ஏராளமானக் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நிஹாங்க் என்பவர்கள் ஆயுதங்கள் ஏந்திய சீக்கியர்கள் என்பதும் அவர்கள் நீல நிற ஆடையை அணிந்திருப்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.    
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com