திரெட்ஸ் செயலி என்ன ஆனது?

ட்விட்டருக்குப் போட்டி எனக் கருதப்பட்டு மிகவும் பரபரப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட மெட்டாவின் திரெட்ஸ் செயலி பயன்பாடு ஆரம்பித்த 3 மாதங்களிலேயே பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 
திரெட்ஸ் செயலி என்ன ஆனது?

ட்விட்டருக்குப் போட்டி எனக் கருதப்பட்டு மிகவும் பரபரப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட மெட்டாவின் திரெட்ஸ் செயலி பயன்பாடு ஆரம்பித்த 3 மாதங்களிலேயே பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.  

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, ட்விட்டருக்குப் போட்டியாக 'திரெட்ஸ்' என்ற செயலியைக் கடந்த ஜூலை 6 ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.

அந்த நேரத்தில் ட்விட்டரில் பல்வேறு கட்டுப்பாடுகள், சந்தா கட்டணம் என்று புதிய விதிகள் கொண்டுவரப்பட்டதால் ட்விட்டருக்கு மாற்றாக இது இருக்கும் என்று பேசப்பட்டது. 

அதன்படியே மிகவும் பரபரப்பாக திரெட்ஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமான வெறும் 4 மணி நேரத்தில் 50 லட்சம் பேர் இதில் இணைந்தனர். 

பயனர்கள் எளிதாக திரெட்ஸில் கணக்கு தொடங்கும்விதமாகவும் அதிகமாக பயனர்களை வரவழைக்கும் பொருட்டும் இன்ஸ்டாகிராம் கணக்கின் உள்நுழைவு விவரங்களைப் பயன்படுத்தி திரெட்ஸில் இணையலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 

அதன்படியே வேறு எந்த சமூக வலைத்தளமும் செய்யாத சாதனையை திரெட்ஸ் செய்தது. தொடங்கிய சில நாள்களில் அதிக பயனர்களைப் பெற்ற செயலி திரெட்ஸ் எனலாம். 5 நாள்களில் 10 கோடி பேர் இணைந்ததாக நிறுவனம் தகவல் தெரிவித்தது. 

ஆனால் தொடங்கிய ஒருசில வாரங்களிலேயே திரெட்ஸ் செயலியின் பயன்பாடு குறையத் தொடங்கியது. கடந்த ஜூலை இறுதியில் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கும் அதனை ஒப்புக்கொண்டார். 

திரெட்ஸ் செயலில் பல புதிய அம்சங்களை சேர்த்து பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி செய்வோம் என்றும் கூறியிருந்தார். 

இந்நிலையில், திரெட்ஸ் 13 கோடி கணக்குகளைக் கொண்டிருந்தாலும், கடந்த ஜூலை 7 ஆம் தேதி 4.4 கோடியாக இருந்த திரெட்ஸின் தினசரி பயனர்களின் எண்ணிக்கை தற்போது வெறும் 1.3 கோடியாகக் குறைந்துள்ளது. அதுபோல பயனர்கள் தினசரி திரெட்ஸில் செலவிடும் நேரம் 19 நிமிடங்களிலிருந்து, வெறும் 4 நிமிடங்களாகக் குறைந்துவிட்டது. 

உலகளாவிய அளவில்கூட திரெட்ஸில் கணக்கு தொடங்கிய பிரபலங்கள், பிரபல நிறுவனங்கள் சமீபமாக பெரிதாக அதனைக் கண்டுகொள்வதில்லை, அதாவது அதில் பதிவுகள் ஏதும் இடுவதில்லை.

சிலர் தொடங்கியபோது பதிவிட்டதுடன் சரி, சிலர் கடந்த சில வாரங்களாக எந்த அப்டேட்டும் செய்யவில்லை. தற்போது தொடர்ந்து அப்டேட் செய்யும் பிரபலங்கள், நிறுவனங்களும் சரி, பெரிதாகப் பின்தொடர்பவர்கள் (பாலோவர்ஸ்) இல்லை. 

தொடங்கியபோது அதிரடி காட்டிய திரெட்ஸ் பயன்பாடு ஆரம்பித்து 3 மாதங்களில் 82% சரிந்துவிட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

காரணம் என்ன? 

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டரை வாங்கினார். அதுமுதலே ட்விட்டர் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. 

ட்விட்டர் பணியாளா்கள் நீக்கம், பயன்படுத்தப்படாத ட்விட்டர் கணக்குகள் நீக்கம், பிரபலங்கள் பெயரில் உள்ள போலி கணக்குகள் நீக்கம், ட்விட்டர் கணக்கு ப்ளூடிக் பெற கட்டணம்.. இறுதியாக ட்விட்டர் லோகோவை மாற்றியதுகூட பயனர்களிடையே சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. மேலும், பாதுகாப்பை மீறி 20 கோடி ட்விட்டர் பயனாளர்களின் மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள் திருடப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த சூழ்நிலையில்தான் அறிமுகப்படுத்திய திரெட்ஸ் செயலி மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ட்விட்டர் மீது கடுப்பில் இருந்தவர்கள் திரெட்ஸ் ஒரு தீர்வாக இருக்கும் என்று எண்ணினர். 

ஆனால், திரெட்ஸ் செயலி இன்ஸ்டாகிராம் போலவே இருந்தது. வெறும் பொழுதுபோக்குக்காக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போலவே, அதன் அம்சங்கள் இருந்தன. புகைப்படங்கள், விடியோக்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 

பிரபலங்களைப் பொருத்தவரை சினிமா, விளையாட்டுத் துறை சார்ந்த பிரபலங்கள்தான் அதிகம் இணைந்து தொடர்ந்து அப்டேட் செய்து வந்தனர். 

நாட்டில் முக்கிய பிரமுகர்கள் குறிப்பாக அரசியல்வாதிகள் யாரும் இதனை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஒருசிலர் கணக்கு தொடங்கினாலும் அதன் பின்னர் பதிவுகள் இடவில்லை. பெரும்பாலான பிரபலங்கள் முக்கிய அறிவிப்புகளை ட்விட்டரில்தான் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ட்விட்டர் தளம் அவர்களின் அதிகாரப்பூர்வ தகவல் பரிமாற்று மையமாகவே மாறிவிட்டது. 

ட்விட்டரைப் பொருத்தவரை 35  கோடி பயனர்கள் உள்ளனர். நாள் ஒன்றுக்கு பயனர்களின் தினசரி செலவழிக்கும் நேரம் 30 நிமிடங்களாக உள்ளது.

ட்விட்டருக்கு மாற்றாக இதற்கு முன்னர் பல செயலிகள் வந்துள்ளன. ஆனால், ட்விட்டரை நெருங்க முடியாமலே பயன்பாடற்று போகின. எனினும் மெட்டா நிறுவனமான திரெட்ஸ் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அதுவும் இல்லாமல் போய்விடும் சூழ்நிலைதான் ஏற்பட்டுள்ளது. 

மிகப்பெரிய அளவில் திரெட்ஸ் செயலியில் மாற்றம் கொண்டுவந்து மீண்டும் மக்களிடையே கொண்டுசேர்த்தால் அதில் உள்ள பயனர்களைத் தக்கவைக்கவும் அதிகப்படுத்தப்படுத்தவும் வாய்ப்புள்ளது. 

தற்போதெல்லாம் திரெட்ஸ் பற்றிய செய்திகள்கூட அவ்வளவாக வெளிவராத நிலையில், ட்விட்டர் உடனான போட்டியில் திரெட்ஸ் தோற்று நிற்பதாகத்தான் பயனர்கள் கருதுகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com