
கைது செய்யப்பட்ட கட்சித் தலைவர் சஞ்சய் சிங்கை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்காமல் எங்கும் அழைத்துச் செல்லக்கூடாது என்ற நீதிமன்றத்தின் உத்தரவை ஆம் ஆத்மி கட்சி வரவேற்றுள்ளது.
ரத்து செய்யப்பட்ட தில்லி கலால் கொள்கையில் முறைகேடுகள் செய்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் கைதான ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கின் அமலாக்கத் துறை காவலை அக்டோபா் 13-ஆம் தேதி வரை சிறப்பு நீதிமன்றம் நீட்டித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக ஆம் ஆத்மி எம்எல்ஏ திலீப் பாண்டே செய்தியாளர்களிடம் பேசியது,
அமலாக்கத்துறை சில மறைமுக நோக்கங்களை கொண்டுள்ளது என்று சிங் கூறியதை மீண்டும் வலியுறுத்தினார். நீதிமன்றத்துக்குத் தெரியாமல் எம்.பி.யை
தெறியாத இடங்களுக்கு அழைத்துச் செல்ல முயற்சி நடந்ததாக பாண்டே குற்றம் சாட்டினார்.
விசாரணையின்போது சிங் நீதிமன்றத்தில் கூறியது,
காவலை நீட்டிக்க அமலாக்கத் துறைக்கு எந்தக் காரணமும் இல்லை. அமலாக்கத் துறையின் கற்பனையான குற்றச்சாட்டுகளுக்காக நான் குற்றத்தை ஒப்புக்கொள்ள மாட்டேன். நீதிமன்றம் அமலாக்கத் துறைக்கு எனக்கு காவல் வழங்கிய பிறகு, விசாரணையின் கடைசி தேதியில் இரவு 10 மணிக்கு, நான் வேறு எங்கோ அழைத்துச் செல்லப்படுவதாக அவர் கூறினார்.
நான் என்கவுன்டரில் கொல்லப்பட்டால் என்ன நடக்கும், யார் பொறுப்பு? அவர்கள் பொறுப்பேற்பார்கள் என்றார். நான் இறந்த பிறகு பொறுப்பேற்று என்ன பயன்? மீண்டும், மீண்டும் நீதிமன்ற உத்தரவைக் கேட்டேன் என்று கூறினார்.
சஞ்சய் சிங்கின் குற்றச்சாட்டுகளை அமலாக்கத் துறை தரப்பில் மறுக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, நீதிமன்ற உத்தரவு இல்லாமல் அவரை அழைத்துச் செல்லக் கூடாது என்று உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதலுக்கு தாங்கள் நன்றி தெரிவிப்பதாக பாண்டே கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.