சீன போர்க்கப்பல்களை கண்காணிக்கும் இந்திய கடற்படை

இந்தியா, அமெரிக்கா எதிர்ப்பையும் மீறி கொழும்பு துறைமுகத்துக்கு வந்திருக்கும் சீன ஆய்வுக் கப்பலை, இந்திய கடற்படை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

புது தில்லி: இந்தியா, அமெரிக்கா எதிர்ப்பையும் மீறி கொழும்பு துறைமுகத்துக்கு சீன ஆய்வுக் கப்பல் வந்திருக்கும் நிலையில், இந்திய கடற்படை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.

சீன நாட்டின் கடற்படை கப்பல்களும் போர்க்கப்பல்களும் போர்ப் பயிற்சிக்காக பாகிஸ்தான் நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இந்தியாவின் பி-81 கண்காணிப்பு விமானங்கள் மற்றும் எம்க்யூ-9பி கண்காணிப்பு டிரோன்களும் கடற்பரப்பில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவுக்குச் சொந்தமான கடற்பரப்புகள் மற்றும் இலங்கை வந்திருக்கும் சீன ஆய்வுக் கப்பலையும் இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இந்தியா, அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி சீனாவின் ஷி யான் 6' ஆய்வுக் கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை புதன்கிழமை வந்தடைந்தது. 

இந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெறும் கடற்படை பயிற்சியில் பங்கேற்கும் வகையில், சீன கடற்படையின் 3 போர்க் கப்பல்கள் பாகிஸ்தான் எல்லையை நோக்கிச் சென்று கொண்டிருக்கினற்ன.

ஆனால், பாகிஸ்தான் மற்றும் சீன போர்க்கப்பல்கள், பெரிசியன் கல்ஃப் பகுதிக்கு நெருக்கமாக வந்து, இஸ்ரேல் - ஹமாஸ் போருக்குப் பிறகு, குவிக்கப்பட்டிருக்கும் அமெரிக்கப் படைகளை நோட்டமிடலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. எனவே, இந்திய கடற்படை, கடல்பரப்பில் தீவிர கண்காணிப்புப் பணியை முடுக்கிவிட்டிருக்கிறது.

முன்னதாக சீன ஆய்வுக் கப்பலுக்கு இலங்கைக்குள் அனுமதி அளிக்கப்பட்டது குறித்த தகவலை அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். கடந்த வாரம் சீனாவுக்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து, இந்தக் கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது. 

ஆய்வு மற்றும் கண்காணிப்பு கப்பல்களை இலங்கைக்கு சீனா தொடர்ந்து அனுப்பி வருகிறது. இது தொடர்பாக இலங்கையிடம் இந்தியா தனது கவலையைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. 

இலங்கையின் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையுடன் (என்ஏஆர்ஏ) இணைந்து கடல்சார்ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட சீன ஆய்வுக்கப்பல் அக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தர உள்ளதாக அந்நாட்டு அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து, இந்தக் கப்பலின் இலங்கை பயணம் குறித்து அமெரிக்கா கவலைத் தெரிவித்திருந்தது. 

சீன ராணுவத்தின் கடற்படை கப்பலான "ஹை யாங் 24 ஹாவோ' கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை வந்தது. இதேபோன்று, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு சீன கப்பலான யுவான் வாங் 5' இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com