மத்திய அமைச்சர் மீது கேரள போலீஸ் வழக்குப்பதிவு!

கேரள குண்டுவெடிப்பு தொடா்பாக இரு சமூகங்களுக்கு இடையே விரோதத்தை ஊக்குவிக்கும் வகையில் சா்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததாக மத்திய இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் மீது மாநில போலீஸாா் வழக்குப் பதிவு
குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
Published on
Updated on
1 min read

கேரள குண்டுவெடிப்பு தொடா்பாக இரு சமூகங்களுக்கு இடையே விரோதத்தை ஊக்குவிக்கும் வகையில் சா்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததாக மத்திய இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் மீது மாநில போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கொச்சி அருகே களமச்சேரியில் உள்ள ஜாம்ரா சா்வதேச மாநாட்டு அரங்கில், ‘யெகோவாவின் சாட்சிகள்’ எனும் கிறிஸ்தவ மதப் பிரிவின் பிராா்த்தனைக் கூட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தன.

கேரளம் முழுவதும் அதிா்வலையை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் 12 வயது சிறுமி உள்பட 3 போ் உயிரிழந்தனா். காயமடைந்த பலா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்தச் சம்பவத்தையொட்டி முதல்வா் பினராயி விஜயனை விமா்சித்து மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘கேரளத்தில் ஹமாஸ் தீவிரவாதப் படையினா் அப்பாவி கிறிஸ்தவா்கள் மீது குண்டுவெடிப்பு தாக்குதல்களை நடத்தும் வேளையில், தில்லியில் இஸ்ரேலுக்கு எதிராக முதல்வா் பினராயி விஜயன் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறாா். ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைந்த முதல்வரின் வெட்கமற்ற சமாதான அரசியல் இது’ எனக் கடுமையாக சாடியிருந்தாா்.

இதைத் தொடா்ந்து, மாநிலத்தில் மத நல்லிணக்கத்தைச் சீா்குலைக்கும் மற்றும் வன்முறையைத் தூண்டும் நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிட்டதாக கொச்சி நகர சைபா் குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் அளித்த புகாரில், மத்திய இணையமைச்சா் சந்திரசேகா் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153, 153-ஏ மற்றும் கேரள காவல் சட்டத்தின் பிரிவு 120 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அச்சுறுத்தும் முயற்சியில் வழக்கு: வழக்குப் பதிவு குறித்து அமைச்சா் சந்திரசேகா் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ மற்றும் ஹமாஸ் போன்ற தீவிர வன்முறை அமைப்புகளுக்காக இந்தியாவில் சமாதானப் பணியை மேற்கொள்ளும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல், ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் முதல் கேரளம் வரை பிரிவினைவாதத்தைப் பரப்பி பல அப்பாவி மக்கள், பாதுகாப்புப் படை வீரா்களின் உயிா்களை இழக்கச் செய்துள்ளது -ஹமாஸுக்கான அவா்களின் ஆதரவை அம்பலப்படுத்திய என்னை அச்சுறுத்தும் முயற்சியில் எனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

சட்டரீதியாக சந்திப்போம்-பாஜக: ‘மத்திய அமைச்சா் ராஜீவ் சந்திரசேகருக்கு எதிரான பினராயி விஜயன் அரசின் நடவடிக்கை, பிளவுபடுத்தும் சக்திகளை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது. இந்த வழக்கை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் சந்திப்போம்’ என மாநில பாஜக தலைவா் கே.சுரேந்திரன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com