மணிப்பூர் எரியும்போதுகூட சிறப்புக் கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை, இப்போது ஏன்? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிா்கொள்வதற்காக 28 எதிா்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை அமைத்துள்ளன. அக்கூட்டணியின் முதல் கூட்டம் பிகாா் தலைநகா் பாட்னாவிலும், 2-ஆவது கூட்டம் பெங்களூரிலும் நடைபெற்றது.
தொடர்ந்து கூட்டணியின் 3-ஆவது கூட்டம் மகாராஷ்டிரத்தின் மும்பையில் நேற்றும் இன்றும் நடைபெற்றது. காங்கிரஸ், திமுக உள்பட 28 எதிா்க்கட்சிகள் இதில் கலந்துகொண்டுள்ளன.
இதையும் படிக்க | ஒரே நாடு, ஒரே தேர்தல்: சிறப்புக்குழு அமைத்தது மத்திய அரசு!
கூட்டத்திற்குப் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், 'இன்று யாரையும் கேட்காமல் மத்திய அரசு, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. கரோனா தொற்றுநோயின்போது, சீனப் பிரச்னையின்போது, பணமதிப்பிழப்பு நீக்கம் தொடர்பான பிரச்னைகளின்போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்னையின்போது ஏன், மணிப்பூர் எரியும்போதுகூட சிறப்புக்கூட்டத்திற்கு அழைக்கவில்லை. இப்போது சிறப்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததன் நோக்கம் புரியவில்லை. இது நாட்டை நடத்துவதற்கான வழி அல்ல. நாம் மெதுவாக சர்வாதிகாரத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம்.
அனைத்துக் கட்சிகளும் இணைந்து இந்த கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடித்துள்ளன. மும்பையில் கூட்டத்தில் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். ஆனால் அனைவருக்கும் ஒரே நோக்கம் என்னவெனில், வேலையில்லாத் திண்டாட்டம், எரிபொருள் விலை உயர்வு ஆகிய பிரச்னைகளை எதிர்த்து எப்படி போராடுவது? அவர்கள் (பாஜக) எரிபொருளின் விலையை உயர்த்தி பின்னர் இப்போது குறைத்துள்ளார்கள். மோடி ஒருபோதும் ஏழைகளுக்காக உழைக்க மாட்டார் என்று ராகுல் காந்தி நேற்று ஒரு அறிக்கையை காட்டினார். அதானியின் வருமானம் அதிகரித்துள்ளது. நாட்டின் இந்த நிலைமை தான் இருக்கிறது' என்று பேசினார்.
இதையும் படிக்க | இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் குழுவில் மு.க. ஸ்டாலின்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.