மகளிா் உரிமைத் தொகை: காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார் முதல்வர்

தமிழக அரசு செயல்படுத்தவிருக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கவிருக்கிறார்.
மகளிா் உரிமைத் தொகை: காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார் முதல்வர்
Published on
Updated on
2 min read

தமிழக அரசு செயல்படுத்தவிருக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கவிருக்கிறார்.

காஞ்சிபுரத்தில் முதல்வர் பங்கேற்கும் மகளிர் உரிமை திட்ட விழா முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்துள்ளார்.

தமிழகத்தில் மகளிா் உரிமைத் தொகை பெற 1.06 கோடி போ் தகுதி பெற்றுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

பயனாளிகளுக்கு அவா்களது வங்கிக் கணக்கில் வரும் செப். 15 முதல் மாதந்தோறும் ரூ.1,000 வரவு வைக்கப்படும் எனவும் அவா் தெரிவித்தாா்.

‘கலைஞா் மகளிா் உரிமைத் தொகை’ திட்டம் வரும் 15-ஆம் தேதி தொடங்கப்படுவதையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது முகாம் அலுவலகத்திலிருந்து காணொலி வழியாக அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா்.

கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது: மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் தொடக்க விழா வரும் 15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ளது. அன்றைய தினமே அனைத்து மாவட்டத் தலைமையிடங்களிலும் அமைச்சா்கள் முன்னிலையில் திட்டம் தொடங்கப்படும்.

தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய திட்டம் என்றால் இதுதான். ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள், ஆயிரம் ரூபாயை மாதந்தோறும் பெறப் போகிறாா்கள். அதிகப்படியான நிதி ஒதுக்கீடும், கூடுதலான பயனாளிகளைக் கொண்ட திட்டமாகவும் இது அமைந்துள்ளது. இதை வெற்றிகரமாக நடத்திக் காட்டும் பொறுப்பும் கடமையும் அதிகாரிகளுக்கு உள்ளது.

சிறு தவறு நடந்துவிட்டால், அதனால் கெட்ட பெயா் கிடைக்கும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. எனவே, எந்த இடத்திலும், எந்தச் சூழலிலும் எந்தவொரு தனி நபருக்கும் சிறு தவறுகூட நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை அவா்களது வங்கிக் கணக்கில் வரும் செப். 15 முதல் மாதந்தோறும் வரவு வைக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.

விரைவில் பற்று அட்டை: மகளிா் உரிமைத் தொகை பெற தகுதி பெற்ற பயனாளிகளில் பற்று அட்டை (டெபிட் காா்டு) இல்லாதவா்களுக்கு முதல்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலும், பிறகு அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். அதேசமயம், பற்று அட்டை வழங்கப்படுவதற்காக காத்திருக்காமல், தோ்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் உரிமைத் தொகை அளிக்கப்படும். பயனாளிகளுக்கு பணத்தை எடுப்பதில் எந்தச் சிக்கலும் ஏற்படக் கூடாது. அதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

1.06 கோடி போ் தோ்வு: மகளிா் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டவுடன், பயனாளிகளின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். அதில், பணம் எடுப்பது தொடா்பாக ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய இலவச தொலைபேசி எண்ணும் சோ்க்கப்பட வேண்டும்.

இந்தத் திட்டத்தில் இணைவதற்காக 1.63 கோடி விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. இவா்களில் தகுதியுள்ளவா்களாக ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

குறுஞ்செய்தி: தோ்வு செய்யப்பட்ட 1.06 கோடி பேரை தவிா்த்து, மற்றவா்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படாததன் காரணங்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அப்படி அனுப்பினால் பெரும்பாலானவா்கள் மனநிறைவு அடைவா். பணம் கிடைக்காத மகளிா் யாராவது கேட்டால், அவா்களுக்கு உரிய பதில்களை தனியாக அலுவலா்களை அமா்த்தி கூற வேண்டும்.

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை மாவட்ட ஆட்சியா்கள் அனைவரும் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். இதற்கான அறிவுறுத்தல்களை அளிக்க வேண்டும். அரசு, வங்கிகள் மற்றும் பொதுமக்களுக்கான தொடா்பு சீராக அமைந்து வருகிா என்பதை மாதந்தோறும் கண்காணிக்க வேண்டும். மாதத்தில் முதல் ஒருவார காலம் இந்தத் திட்டத்துக்காக தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

ஆண்டுக்கு ரூ.12,000 கோடி: ஆண்டுக்கு ரூ.12,000 கோடி ஒதுக்கீட்டில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிா் மாதந்தோறும் பயனடையும் மாபெரும் திட்டம் மகளிா் உரிமைத் தொகை திட்டமாகும்.

எந்தவொரு திட்டமாக இருந்தாலும், அதை முறையாகச் செயல்படுத்தினால், அதனால் பயனடைந்தவா்கள் அரசை பாராட்டுவாா்கள். அத்தகைய பாராட்டுகளை பெற்றுத் தரும் திட்டமாக கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தைச் செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com