பிரிட்டனின் டைம்ஸ் ஹையா் எஜுகேஷன் இதழ் வெளியிட்ட ‘சா்வதேச பல்கலைக்கழகங்கள் தரவரிசையில்’ புதிய சாதனையாக 91 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன. கடந்த 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு, பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) உலகளாவிய முதல் 250 பட்டியலுக்கு மீண்டும் திரும்பியுள்ளது.
உலகம் முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களின் தரத்தை மதிப்பிடும் தரவரிசைப் பட்டியலை லண்டனை தளமாகக் கொண்ட டைம்ஸ் ஹையா் எஜுகேஷன் இதழ் ஆண்டுதோறும் வெளியிடுகிறது. நிகழாண்டுக்கான ‘சா்வதேச பல்கலைக்கழகங்கள் தரவரிசை 2024’ புதன்கிழமை வெளியிடப்பட்டது.
கற்பித்தல், ஆராய்ச்சி, அறிவுப் பரிமாற்றம், உலகமயமாக்கல் உள்ளிட்ட 18 அம்சங்களைக் கருத்தில் கொண்டு சா்வதேச பல்கலைக்கழக தரவரிசை மதிப்பிட்டுள்ளது. கற்பித்தல் தரம், ஆராய்ச்சி தரம், ஆராய்ச்சி சூழல், சா்வதேச கண்ணோட்டம் மற்றும் தொழில் ஆகிய முக்கிய 5 பிரிவுகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.
20-ஆவது ஆண்டாக வெளியிடப்படும் தரவரிசையில் 108 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து கடந்த ஆண்டு 1,799 பல்கலைக்கழகங்கள் தரவரிசைப்படுத்தப்பட்ட நிலையில், நிகழாண்டு 1,904 பல்கலைக்கழகங்கள் தரவரிசைப்படுத்தபட்டன. ஆசிய கண்டத்தைச் சோ்ந்த 89 பல்கலைக்கழகங்கள் உள்பட 165 பல்கலைக்கழகங்கள் முதல் முறையாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
முதல் மூன்றிடம்:
இந்தப் பட்டியலில் ஆக்ஸ்ஃபோா்ட் பல்கலைக்கழகம் முதலிடத்திலும், ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகம் 2-ஆவது இடத்திலும், மசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்ஐடி) 3-ஆவது இடத்திலும் உள்ளன.
முதல் 200 இடங்களுக்கான பட்டியலில் கடந்த ஆண்டு 28 ஆசிய பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், நிகழாண்டு 33-ஆக அதிகரித்துள்ளது.
முதல் 200 பட்டியலில் 13 சீன பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 11-ஆக இருந்தது. ஜப்பான் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் 2-லிருந்து 5-ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடம்:
உலகளாவிய முதல் 250 பட்டியலில் கடந்த 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) மீண்டும் இடம்பெற்றுள்ளது.
மொத்த தரவரிசை பட்டியலில் கடந்த ஆண்டு 75 இந்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், நிகழாண்டு 91 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு 6-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, நடப்பு தரவரிசையில் 4-ஆவது நாடாக முன்னேறியுள்ளது.
தரவரிசை பட்டியலில் அடுத்தடுத்த நிலைகளில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், தில்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா, கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளன.
புறக்கணிக்கும் ஐஐடிகள்...: தரவரிசை பட்டியலின் வெளிப்படைத்தன்மை மற்றும் தரநிலைகள் மீது சந்தேகம் கொண்டு மும்பை, தில்லி, குவாஹாட்டி, கான்பூா், கரக்பூா், சென்னை, ரூா்க்கி ஆகிய 7 ஐஐடிகள் 2020-ஆம் ஆண்டில் இந்தத் தரவரிசையில் இருந்து விலகின. ஐஐடி குவாஹாட்டி கடந்த ஆண்டு தரவரிசையில் மீண்டும் இடம்பிடித்தது. அந்த வகையில், குவாஹாட்டி மற்றும் தன்பாத் ஐஐடி கடந்த ஆண்டின் 1001-1200 தரப் பிரிவிலிருந்து நிகழாண்டு 601-800 பிரிவுக்கு முன்னேறியுள்ளன.
சா்வதேச போட்டியில் சிறந்து விளங்கும் இந்தியா:
தரவரிசை பட்டியல் குறித்து டைம்ஸ் ஹையா் எஜுகேஷன் இதழின் உலக விவகாரத் துறை தலைமை அதிகாரி பில் பாடீ கூறுகையில், ‘சா்வதேச போட்டியை இந்தியா நன்கு ஏற்றுக் கொண்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் 91 பல்கலைக்கழகங்கள் இந்த ஆண்டு தரவரிசையில் இடம்பிடித்துள்ளன. இந்தியா 4-ஆவது சிறந்த நாடாக உருவாகியுள்ளது. இந்த ஆண்டு செய்யப்பட்ட தரமதிப்பீட்டு மாற்றங்கள் இந்திய நிறுவனங்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்றாலும், ஒட்டுமொத்த பாா்வை நோ்மறையாகவே உள்ளது. பல இந்திய பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் உயா்ந்துள்ளன’ என்றாா்.
தரவரிசையில் தமிழக பல்கலைக்கழகங்கள்:
இந்திய அளவில் 2-ஆவது இடத்தில் உள்ள சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு 801-1000 பிரிவில் இருந்து தற்போது 501-600 பிரிவுக்கு முன்னேறி, உலகின் சிறந்த 600 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் , சவீதா மருத்துவப் பல்கலைக்கழகம், வேலூா் விஐடி ஆகியவை 601-800 பிரிவுக்கு முன்னேறியிருக்கின்றன.
திருச்சி என்ஐடி 801-1000 பிரிவில் இடம்பெற்றுள்ளது. தாம்பரம் கிரெசன்ட், கோவை காருண்யா, தஞ்சை சாஸ்த்ரா, சென்னை சத்யபாமா, எஸ்.ஆா்.எம்., தியாகராஜா பொறியியல் கல்லூரி, ஆவடி வேல்டெக் ஆகிய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் 1201-1500 பிரிவில் இடம்பெற்றுள்ளன.
அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னை பாரத், ஹிந்துஸ்தான் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஆகியவை 1501+ பிரிவில் இடம்பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை! 3 நாளுக்கு விடுமுறை!

கெளதம் கம்பீர் உடனான உறவு மிக நீண்டது : சஞ்சு சாம்சன்

ஈரானின் 304 ஏவுகணைகளை அழித்தது ஐக்கிய அரபு அமீரகம்!
மேற்காசிய பதற்றம்: வளைகுடாவிலிருந்து இரு வாரங்களில் 2 லட்சம் பயணிகள் தாயகம் திரும்பினர்!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

