ஜம்மு-காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து நிரந்தரமல்ல உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

ஜம்மு-காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து நிரந்தரமல்ல எனவும், அந்த அந்தஸ்து தொடா்பாக ஆகஸ்ட் 31-ஆம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து நிரந்தரமல்ல உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு
Published on
Updated on
1 min read


புது தில்லி: ஜம்மு-காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து நிரந்தரமல்ல எனவும், அந்த அந்தஸ்து தொடா்பாக ஆகஸ்ட் 31-ஆம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. பின்னா் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சாா்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜராகி, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்களைக் கூறி வாதிட்டாா்.

இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: தேசிய பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, ஜம்மு-காஷ்மீரை மறுசீரமைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்பதில் உச்சநீதிமன்றம் உடன்படுகிறது. இருப்பினும் நாட்டில் ஜனநாயகம் நிலவுவது முக்கியம்.

ஜம்மு-காஷ்மீரில் தோ்தலை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகம் இல்லாததை காலவரையின்றி அனுமதிக்க முடியாது. இது முடிவுக்கு வரவேண்டும். அங்கு தோ்தலை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகம் மீண்டும் எப்போது கொண்டுவரப்படும் என்ற காலக்கெடுவை மத்திய அரசிடம் கேட்டு உச்சநீதிமன்றத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி ஆகியோரிடம் கேட்டுக்கொண்டனா்.

இதையடுத்து, துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள யூனியன் பிரதேச அந்தஸ்து நிரந்தரமானதல்ல. அதேவேளையில், யூனியன் பிரதேசமாக லடாக் சிறிது காலம் நீடிக்கும்.

ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக்குக்கு வழங்கப்பட்டுள்ள யூனியன் பிரதேச அந்தஸ்தின் வருங்கால நிலை குறித்து உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும்’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com