பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்: ஜெய்பூர் வந்தார் ராஜ்நாத்

ராஜஸ்தானில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கும் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜெய்ப்பூர் வந்துள்ளார்.
கோப்புப் பட்ம்
கோப்புப் பட்ம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கும் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜெய்ப்பூர் வந்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வா் தோ்வுக்கு மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைக்கப்பட்ட மூன்று பாா்வையாளா்கள் குழு இன்று ஜெய்ப்பூர் வந்துள்ளது. அவர்களை ஜெய்ப்பூர் விமான நிலையத்தில், பாஜக மாநில தலைவர் சி.பி. ஜோஷி மற்றும் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே வரவேற்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று, அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு இன்னும் விடைகிடைக்காத நிலையில், இன்று மாலை 4 மணிக்கு பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

ஒருவேளை, இன்று நடைபெறும் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ராஜஸ்தானின் அடுத்த முதல்வர் யார் என்ற ரகசியம் உடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக மாநில பொதுச் செயலாளர் மற்றும் எம்எல்ஏவான பஜன்லால் ஷர்மா இது பற்றி கூறுகையில், கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம், தலைமை அலுவலகத்தில், பாஜக பார்வையாளரும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் மற்றும் இரண்டு பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெறும்.

புதிதாக தேர்வான அனைத்து எம்எல்ஏக்களும் இந்த கூட்டத்தில் நிச்சயம் பங்கேற்க வேண்டும். இந்த கூட்டத்தில் புதிய முதல்வர் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

முன்னதாக முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே கடந்த புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை புது தில்லியில் பாஜக தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வந்துள்ளார்.

ராஜஸ்தானில் 199 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் நடைபெற்ற தோ்தலில் 115 இடங்களைக் கைப்பற்றி, பாஜக வெற்றி பெற்றது. அங்கு ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸுக்கு 69 இடங்களே கிடைத்தன.

ராஜஸ்தானில் புதிய முதல்வா் யாரென்ற கேள்வி நீடித்து வரும் நிலையில், முன்னாள் முதல்வா் வசுந்தரா ராஜே சிந்தியாவை பாஜக எம்எல்ஏக்கள் சந்தித்துப் பேசி வருகின்றனா். இந்த மாநிலத்தில் முதல்வா் தோ்வுக்கு மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்பட மூன்று பாா்வையாளா்களை கட்சி மேலிடம் நியமித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com