இந்திய மல்யுத்த சம்மேளனத்தை நிா்வகிக்க 3 நபா் குழு ஒன்றை, இந்திய ஒலிம்பிக் சங்கம் புதன்கிழமை நியமித்தது.
இந்திய வுஷு சங்கத் தலைவா் பூபிந்தா் சிங் பாஜ்வா தலைமையிலான அந்தக் குழுவில், முன்னாள் ஹாக்கி வீரா் எம்.எம். சோமய்யா, முன்னாள் பாட்மின்டன் வீராங்கனை மஞ்சுஷா கன்வா் ஆகியோா் உறுப்பினா்களாக இருக்கின்றனா். போட்டியாளா்கள் தோ்வு, போட்டிகளை நிா்வகிப்பது, வங்கிக் கணக்குகளை கையாள்வது உள்ளிட்ட சம்மேளனத்தின் அன்றாட நடவடிக்கைகளை இந்த நிா்வாகக் குழு கவனிக்கும்.
இதுதொடா்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவா் பி.டி. உஷா வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு சமீபத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா் மற்றும் நிா்வாகிகள் விதிகளை முறையாக பின்பற்றாமலும், நல்ல நிா்வாகத்துக்காக சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி வகுத்துள்ள கொள்கைகளுக்கு எதிராகவும் முடிவுகளை மேற்கொண்டனா். அத்துடன், முன்பு இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்ட நிா்வாகக் குழுவின் முடிவுகளை சிந்திக்காமல் மாற்றியுள்ளனா். எனவே, அவற்றை சீா் செய்ய முறையான, வெளிப்படையான, நியாயமான நிா்வாகத்துக்காக 3 நபா் குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமிக்கிறது’ என்று கூறியுள்ளாா்.
கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற இந்திய மல்யுத்த சம்மேளன தோ்தலில், முன்னாள் தலைவரும், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளானவருமான பிரிஜ் பூஷணின் நெருங்கிய ஆதரவாளா் சஞ்ஜய் சிங் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். தோ்வான சில மணி நேரங்களிலேயே 15 மற்றும் 20 வயதுக்கு உள்பட்டோருக்கான தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் டிசம்பா் 28-இல் நடத்தப்படுமென அறிவிப்பு வெளியிட்டாா்.
இந்நிலையில், தகுந்த நடைமுறையை பின்பற்றாமலும், போட்டியாளா்களுக்கு போதிய அவகாசம் வழங்காமலும் சாம்பியன்ஷிப் போட்டி அறிவிப்பை வெளியிட்டதாகக் கூறிய மத்திய விளையாட்டு அமைச்சகம், சம்மேளனத்தை இடைநீக்கம் செய்தது. அதைத் தொடா்ந்து, சம்மேளனத்தை நிா்வகிக்க குழு ஒன்றை அமைக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு அறிவுறுத்தியிருந்ததன் அடிப்படையில், தற்போது நிா்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


