பணம் இல்லை.. மனைவியின் உடலைத் தோளில் சுமந்து சென்ற கணவன்!

ஒடிசாவில் உயிரிழந்த மனைவியின் உடலை எடுத்துச்செல்ல ஆட்டோ ஓட்டுநர் மறுத்ததால், கணவன் தோளில் சுமந்து சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியின் உடலை சுமந்து செல்லும் கணவன்
மனைவியின் உடலை சுமந்து செல்லும் கணவன்

ஒடிசாவில் உயிரிழந்த மனைவியின் உடலை எடுத்துச்செல்ல ஆட்டோ ஓட்டுநர் மறுத்ததால், கணவன் தோளில் சுமந்து சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த காவலர் ஒருவர், அவசர ஊர்திக்கு ஏற்பாடு செய்து மனைவியின் உடலை எடுத்துச்செல்ல உதவினார்.

ஒடிசா மாநிலம் கோரபுட் பகுதியில் வசித்து வருபவர் சாமுலு பங்கி. 35 வயதான அவர், தனது உடல்நிலை சரியில்லாத தனது மனைவியை விசாகப்பட்டிணத்திலிருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். 

நீண்ட நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த மனைவி, அங்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள மருத்துவர்களுக்கு ஒத்துழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனை நிர்வாகம், வீட்டில் வைத்து மனைவியை கவனித்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து விசாகப்பட்டிணத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தனது வீட்டுக்கு ஆட்டோ மூலம் மனைவியை அழைத்துச்சென்றுள்ளார். வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போதே மனைவி உயிரிழந்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் வண்டியை இயக்க மறுப்பு தெரிவித்து, அவர்களை பாதியிலேயே இறக்கிவிட்டுள்ளார். ஆட்டோவுக்கு கொடுத்ததுபோக, பணம் இல்லாததால், நெடுஞ்சாலையில் செய்வதறியாது தவித்த சாமுலு, ஒருகட்டத்துக்கு மேல் மனைவியின் உடலை தோளில் சுமந்தவாறு நடந்துள்ளார். அங்கிருந்து அவரின் கிராமத்துக்கு சுமார் 80 கிலோ மீட்டர். 

அப்போது அவரை விசாரித்த அப்பகுதியைச் சேர்ந்த காவலர் ஒருவர், அவசர ஊர்திக்கு ஏற்பாடு செய்து சாமுலுவை அவரின் மனைவி உடலுடன் சொந்த கிராமத்துக்கு அனுப்பிவைத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com