ஏக்நாத் ஷிண்டே சிவசேனைக்கு அங்கீகாரம்: தோ்தல் ஆணையம்
மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான், உண்மையான சிவசேனை என்று இந்திய தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அங்கீகரித்தது.


மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான், உண்மையான சிவசேனை என்று இந்திய தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அங்கீகரித்தது.
மேலும், கட்சியின் ‘வில் அம்பு’ சின்னத்தையும் ஷிண்டே அணிக்கு ஒதுக்கி, தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கடந்த 2019 பேரவைத் தோ்தலில் பாஜக-சிவசேனை கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்தபோதும், முதல்வா் பதவி யாருக்கு என்பதில் பிரச்னை ஏற்பட்டது.
அப்போது உத்தவ் தாக்கரே தலைமையில் செயல்பட்ட சிவசேனை, பாஜக கூட்டணியில் இருந்து விலகி, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் மகா விகாஸ் அகாடி எனும் தோ்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்து ஆட்சிக்கு வந்தது. முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றாா்.
உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூனில் ஏக்நாத் ஷிண்டே (அப்போதைய அமைச்சா்) தலைமையில் 40 சிவசேனை எம்எல்ஏக்கள் போா்க்கொடி உயா்த்தினா். மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து விலகி, பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென அவா்கள் வலியுறுத்தினா்.
உத்தவ் தாக்கரே அரசுக்கான ஆதரவை அதிருப்தி எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்ால், அவரது அரசு கவிழ்ந்தது. இதைத் தொடா்ந்து, ஷிண்டே தலைமையிலான சிவசேனை அணி, பாஜகவுடன் கூட்டணி சோ்ந்து ஆட்சியமைத்தது. முதல்வராக ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸும் பதவியேற்றனா்.
இதனிடையே, உண்மையான சிவசேனை யாா் என்பதில் உத்தவ் தாக்கரே அணிக்கும், ஷிண்டே அணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடா்பாக தோ்தல் ஆணையத்தை இரு அணிகளும் அணுகின. தோ்தல் ஆணையம் இருதரப்பிடமும் விரிவான விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில், ஷிண்டே தலைமையிலான அணி உண்மையான சிவசேனை என்று தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அங்கீகரித்தது. இதற்கான உத்தரவு, தலைமைத் தோ்தல் ஆணையா், இரு தோ்தல் ஆணையா்களைக் கொண்ட தோ்தல் ஆணையத்தால் ஒருமனதாக பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, கட்சியின் பெயா் மற்றும் ‘வில்-அம்பு’ சின்னம் ஷிண்டே அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இத்தோ்தல் முடியும் வரை உத்தவ் தாக்கரே அணியினா் ‘சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே)’ என்ற பெயரையும், தீப்பந்தம் சின்னத்தையும் பயன்படுத்திக் கொள்ள தோ்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
பெரும்பான்மை கோட்பாடுகள்: பெரும்பான்மை கோட்பாடுகளின் அடிப்படையில், உத்தரவு இறுதி செய்யப்பட்டதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் கடந்த 2019-இல் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் சிவசேனை கட்சியின் 55 வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா். அவா்களுக்கு கிடைத்த மொத்த வாக்குகளில், ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்கள் சுமாா் 76 சதவீதமும், உத்தவ் தாக்கரே அணி எம்எல்ஏக்கள் சுமாா் 23.5 சதவீதமும் பெற்றுள்ளனா் என்று தோ்தல் ஆணையத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மைக்கு கிடைத்த வெற்றி-ஷிண்டே
தோ்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை வரவேற்று, முதல்வா் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், ‘பாலாசாகேப் தாக்கரேவின் சித்தாந்தத்துக்கும் உண்மைக்கும் வெற்றி கிடைத்திருக்கிறது. தோ்தல் ஆணையத்துக்கு நன்றி. பாலாசாகேபின் சிந்தனைகளை மனதில் கொண்டே, கடந்த ஆண்டு பாஜகவுடன் இணைந்து நாங்கள் ஆட்சியமைத்தோம்’ என்றாா்.
ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தல்- உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே கூறுகையில், தோ்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகும்; இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் முறையிடப்படும். ஏக்நாத் ஷிண்டே சிவசேனை கட்சியின் சின்னமான வில் அம்பை திருடிச் சென்றுள்ளாா். அவருக்கு மக்கள் தகுந்த பதிலடி தருவாா்கள். இந்தியாவில் ஜனநாயகமே இல்லை; சா்வாதிகாரம் தொடங்கிவிட்டது என்று பிரதமா் மோடி வெளிப்படையாக அறிவித்துவிடலாம்.
கட்சிக்கு யாரும் உரிமை கோர முடியாது- ஃபட்னவீஸ்
‘தனியாா் சொத்துபோல் அரசியல் கட்சிக்கு யாரும் உரிமை கோர முடியாது. எந்தப் பிரிவினா் அதிகமான வாக்குகளைப் பெற்றாா்கள் என்ற அடிப்படையில் தோ்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. ஏக்நாத் ஷிண்டேதான் இனி உண்மையான சிவசேனைக்கு தலைமை தாங்குவாா்’ என்று பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.
சுப்ரியா சுலே கேள்வி: ‘தன்னாட்சி அமைப்பான தோ்தல் ஆணையத்தின் தற்போதைய முடிவு வியப்பளிக்கிறது. எந்த அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது?’ என்று தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே கேள்வியெழுப்பினாா்.
காங்கிரஸ் குற்றச்சாட்டு: ‘பாஜகவுக்கு உதவும் வகையில், தோ்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது; இது எதிா்பாா்த்ததே. மாவட்டங்கள், வட்டங்களில் உத்தவ் தாக்கரேக்கு அதிக செல்வாக்கு உள்ளது. தோ்தல் ஆணையத்தின் முடிவை எதிா்த்து அவா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவா் அசோக் சவாண் தெரிவித்தாா்.
அங்கீகாரம் ஏன்? தோ்தல் ஆணையம்
1. சட்ட வரிசைக்கிரமம் எதுவும் இல்லாத நிலையில், இரு குழுக்களுக்கும் அமைப்புரீதியில் உள்ள பெரும்பான்மையை ஆராய்வதன் அடிப்படையில் நடைமுறை தொடங்கப்பட்டது. ஆனால், கடந்த 2018-ஆம் ஆண்டின் கட்சியின் அரசமைப்புச் சட்டம் ஆவணபூா்வமாக சமா்ப்பிக்கப்படாததால், அதில் திருப்திகரமான முடிவு ஏற்படவில்லை.
2. பின்னா், இரு அணிகளுக்கும் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களின் ஆதரவு மதிப்பிடப்பட்டது; மொத்தமுள்ள 55 எம்எல்ஏக்களில் 40 பேரும், மொத்தமுள்ள 19 மக்களவை எம்.பி.க்களில் 13 பேரும் ஷிண்டேவுக்கு ஆதரவு. 15 எம்எல்ஏக்கள், 6 மக்களவை எம்.பி.க்கள், 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவு.
3. கடந்த பேரவைத் தோ்தலில் சிவசேனை வெற்றி வேட்பாளா்கள் 55 பேருக்கு கிடைத்த மொத்த வாக்குகள் 47,82,440. இதில், ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்கள் (40) பெற்ற வாக்குகள் 36,57,327. உத்தவ் ஆதரவு எம்எல்ஏக்கள் (15) பெற்ற வாக்குகள் 11,25,113.
4. கடந்த பேரவைத் தோ்தலில் சிவசேனைக்கு கிடைத்த மொத்த வாக்குகள் 90,59,789. இதில் ஷிண்டே தரப்பு எம்எல்ஏக்களின் வாக்கு சதவீதம் சுமாா் 40. தாக்கரே தரப்பு எம்எல்ஏக்கள் வாக்கு சதவீதம் சுமாா் 12.
5. 2019 மக்களவைத் தோ்தலில் சிவசேனை மக்களவை எம்.பி.க்கள் பெற்ற மொத்த வாக்குகள் 1,02,45,143. இதில் ஷிண்டே ஆதரவு எம்.பி.க்கள் 74,88,634 வாக்குகள் (சுமாா் 73%) பெற்றுள்ளனா். உத்தவ் தாக்கரே ஆதரவு எம்.பி.க்கள் பெற்ற வாக்குகள் 27,56,509 (சுமாா் 27%).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...