‘பாஜகவிற்கு உதவும் மம்தா’: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பாஜகவிற்கு உதவுவதற்காக திரிணமூல் கட்சி செயல்பட்டு வருவதாக மேகாலயத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.
பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி
பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி

பாஜகவிற்கு உதவுவதற்காக திரிணமூல் கட்சி செயல்பட்டு வருவதாக மேகாலயத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

மேகாலயாவில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகிற பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில் மேகாலய மாநிலம் சில்லாங்கில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேரணி நடைபெற்றது. பேரணியைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். 

அப்போது பேசிய அவர், “உங்களுக்கு திரிணமூல் கட்சியின் வரலாறு தெரியும். மேற்கு வங்கம் வன்முறை நிறைந்ததாக மாறியுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி கோவா சட்டப்பேரவையில் போட்டியிட்டது. பாஜகவிற்கு உதவுவதற்காக பெரும்தொகையை அக்கட்சி செலவிட்டது. திரிணமூல் கட்சியின் எண்ணமே மேகாலயத்தில் பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான்” எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், “பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் நாட்டின் கலாச்சாரத்தை சிதைத்து வருகின்றன. ஆனால் நாங்கள் நம்முடைய வரலாற்றையும், அடையாளத்தையும், பண்பாடு கலாச்சாரத்தையும் அழிந்துபோக விட மாட்டோம். நமது நாடு வன்முறையான நாடு கிடையாது. 

தாங்கள் நினைப்பதை அடுத்தவர் மீது திணிப்பதை ஆளும் அரசு செய்து வருகிறது. அதற்கெதிராக அன்பு, மரியாதை, வன்முறையற்ற சூழலுடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் பாஜக அரசு அபகரித்து வருகிறது. நாடாளுமன்றம், ஊடகம், அரசு நிர்வாகம், தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள் என அனைத்தின் மீதும் ஆர்எஸ்எஸ் தாக்குதல் நடத்துகிறது” எனக் குறிப்பிட்டார். 

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com