ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இணையுமா? 

அடுத்த பத்தாண்டுகளுக்குள் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடத்தைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளதாக கருத்துக் கணிப்பின் முடிவில
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இணையுமா? 
Published on
Updated on
2 min read


புதுதில்லி: அடுத்த பத்தாண்டுகளுக்குள் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடத்தைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளதாக கருத்துக் கணிப்பின் முடிவில் தெரியவந்துள்ளது.

15 நாடுகளைக் கொண்ட ஐ.நா. சபையின் அதிகாரமிக்க அமைப்பான பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் இந்த 5 நாடுகளும் வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்ய முடியும். 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 10 நாடுகள், நிரந்தரமற்ற உறுப்பினர்களாக உள்ளன. இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி அடிப்படையில் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த சூழலில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

கூடுதலாக 5 நிரந்தர உறுப்பு நாடுகளையும், 4 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளையும் சேர்க்க வேண்டும் என்று பெரும்பாலான நாடுகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இணைய இந்தியா, ஜப்பான், பிரேசில், ஜெர்மனி, நைஜீரியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. 

நிரந்தர உறுப்பினர்களாக உள்ள 5 நாடுகளில், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு கருத்துக் கணிப்பு நிறுவனமான அட்லான்டிக் கவுன்சில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இணைய எந்த நாட்டுக்கு அதிக வாய்ப்புள்ளது என்பது குறித்து சர்வதேச அளவில் கருத்துக் கணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆலோசகர்களின் முன்னறிவிப்புக்கு ஏற்ப, அடுத்த சில ஆண்டுகளில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடத்தைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளதாக கருத்துக் கணிப்பின் முடிவில் தெரியவந்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு அதிக வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், நிரந்தர உறுப்பினருக்கான இந்தியாவின் முயற்சியை ஆதரிக்காத ஒரே நாடான சீனா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தக் கூடும்.  

இருப்பினும், இந்தியா நிரந்தர உறுப்பினராக வாய்ப்பிருப்பதாக 26 சதவீதம் பேரும், 11 சதவீதம் பேர் ஜப்பானுக்கும், 9 சதவீதம் பேர் பிரேசிலுக்கும் வாக்களித்துள்ளனர். 

இருப்பினும், பதிலளித்தவர்களில் 64 சதவீதம் பேர் 2033-க்குள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் புதிய நிரந்தர உறுப்பினர் சேர்க்கப்பட மாட்டாது என எண்ணுவதாக தெரிவித்துள்ளனர். 

எனவே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக இந்தியா விரைவில் இணையும் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

இந்தியா மற்றும் பிற ஜி4 நாடுகளான பிரேசில், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகியவை தற்போதைய சவால்களை கையாளும் விதத்தில் பாதுகாப்பு கவுன்சிலில் அவசர சீர்திருத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் முயற்சிகளில் முன்னணியில் உள்ளன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினருக்கைான 2028-29 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் வேட்புமனுவை ஏற்கனவே வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்போதைய நிலையில், இன்றைய புவி-அரசியல் யதார்த்தங்களைப் பிரதிபலிக்கவில்லை என்றும், இந்தியா போன்ற வளரும் சக்திகள் போன்ற நாடுகளுக்கு பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர இடம் இல்லை என்றால் அதன் நம்பகத்தன்மைக்கு ஆபத்து என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.