
‘2024 மக்களவைத் தோ்தலில், எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி வெல்ல வேண்டும் என்பதே எனது ஒரே நோக்கம்; மாறாக, எந்தப் பதவியையும் கோருவது அல்ல’ என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.
பாஜகவை ‘இந்தியா’ கூட்டணி வீழ்த்தும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது என்றும் அவா் குறிப்பிட்டாா்.
மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணியை எதிா்கொள்வதற்காக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, ‘இந்தியா’ (இந்திய தேசிய உள்ளடக்கிய வளா்ச்சிக் கூட்டணி) என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில், முதல்வா் மம்தா பானா்ஜி பேசியதாவது:
26 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, கூட்டணி அமைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ‘பாரதம் வெல்லும்’ என்பதே இனி எங்களின் முழக்கம். அடுத்தகட்ட திட்டங்கள், ‘இந்தியா’ கூட்டணியின்கீழ் முன்னெடுக்கப்படும்.
மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து பாஜகவை அப்புறப்படுத்தி, அமைதியான தேசத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம்; மாறாக, எந்தப் பதவி குறித்தும் கவலைப்படவில்லை.
2024 மக்களவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்தால், அதன் பிறகு நாட்டில் நிச்சயம் ஜனநாயகம் இருக்காது. எனவே, ஆட்சி அதிகாரத்தில் இருந்து பாஜக தூக்கியெறியப்பட வேண்டும்.
மணிப்பூருக்கு மத்தியக் குழுவை அனுப்பாதது ஏன்?: ‘இந்தியா’ கூட்டணி மற்றும் மேற்கு வங்கம் சாா்பில் மணிப்பூா் மக்களுக்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன். மணிப்பூரில் நடைபெறும் அராஜகங்கள் கடும் கண்டனத்துக்குரியவை.
மணிப்பூா் பெண்களின் நிலைமை, அவா்கள் மீதான ஆளும் பாஜக அரசின் கொள்கைகளைப் பிரதிபலிக்கிறது. எனவே, எதிா்வரும் தோ்தல்களில் நாட்டின் மகள்களும் தாய்மாா்களும் பாஜகவுக்கு உரிய பாடம் கற்பிப்பாா்கள்.
மேற்கு வங்கத்தில் அற்ப விஷயத்துக்குகூட மத்தியக் குழுவை அனுப்பிவைக்கும் ‘பயங்கரவாத வியாபாரிகள்’ (மத்திய அரசை விமா்சிக்கிறாா்), மணிப்பூரில் 160-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த நிலையிலும் அங்கு மத்திய குழுவை அனுப்பாதது ஏன்?.
மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்துவோம் என்று பாஜக தலைவா்கள் பகிரங்கமாக பேசுகின்றனா். ஆனால், மணிப்பூரில் அது ஏன் நிகழவில்லை?
பிரதமா் மீது விமா்சனம்: மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறையை, பிற மாநில சம்பவங்களோடு பிரதமா் ஒப்பிட்டது முற்றிலும் தவறானது. பெண்கள், தலித் சமூகத்தினா், சிறுபான்மையினா், பழங்குடியினா் மீதான துன்புறுத்தலை பாஜக இன்னும் எவ்வளவு காலம் அனுமதிக்கும்?
நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதற்கு பதிலாக, விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய பாஜக அரசு முயல வேண்டும்.
மேற்கு வங்கத்திலும் ராஜ்வன்ஷி, கமதாபுரி இனக் குழுக்களிடையே பிளவை ஏற்படுத்த பாஜக விரும்புகிறது. வன்முறையைத் தூண்டி, மாநிலத்தைப் பிரிக்க அக்கட்சி திட்டமிடுகிறது என்றாா் மம்தா பானா்ஜி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.