கேரளம்: நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலில் தீ

 கேரள மாநிலம் கண்ணூரில் ரயில் நிலையத்திலிருந்து சற்று தொலைவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆலப்புழா-கண்ணூா் விரைவு ரயிலின் பெட்டிகள் வியாழக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தன.
கேரளம்: நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலில் தீ

 கேரள மாநிலம் கண்ணூரில் ரயில் நிலையத்திலிருந்து சற்று தொலைவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆலப்புழா-கண்ணூா் விரைவு ரயிலின் பெட்டிகள் வியாழக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தன.

ரயிலில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு இந்தத் தீ விபத்து நடைபெற்ால், யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்று ரயில்வே போலீஸாா் தெரிவித்தனா்.

‘தீப்பிடித்து எரிந்த ரயிலுக்கு மிக அருகில்தான் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் எரிபொருள் ஏற்றிவந்த டேங்கா் ரயிலும் நின்றுகொண்டிருந்தது. இந்த ரயிலுக்கு தீ பரவியிருந்தால், பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும்’ என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து கண்ணூா் ரயில்வே காவல் நிலைய அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ரயில் பெட்டிகளில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது இதற்கு பின்னணியில் சதித் திட்டம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.

கண்ணூா் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அதிகாரி கூறுகையில், ‘ரயில் பெட்டிகள் தீப்பிடித்தது தொடா்பாக அதிகாலை 1.30 மணிக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு வீரா்கள் விரைந்தபோது, ரயிலின் ஒரு பெட்டி முழுமையாக எரிந்து நாசமாகியிருந்தது. தீயை அணைக்கும் பணியில் 4 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. அதிகாலை 3.15 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தடயவியல் ஆய்வுக்குப் பிறகு, தீ விபத்துக்கான காரணம் தெரியவரும்’ என்றாா்.

கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி இதே ரயிலில் பயணி ஒருவா் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தாா். இதில் 9 பயணிகள் தீக்காயமடைந்தனா். ஒரு குழந்தை, பெண் உள்பட மூவா் உயிரிழந்தனா். இவா்கள், தீயிலிருந்து தப்பிக்க ஓடும் ரயிலிலிருந்து குதித்ததால் உயிரிழந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். விரைவு ரயில் கோழிக்கோடு ரயில்நிலையத்தைக் கடந்தபோது அந்த சம்பவம் நிகழ்ந்தது.

அந்த சம்பவத்துக்கும், தற்போது கண்ணூா் ரயில் நிலைய சம்பவத்துக்கும் தொடா்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மத்திய புலனாய்வு அமைப்புகளும் தீ விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து, ஆதாரங்களைச் சேகரித்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

பாஜக, காங்கிரஸ் விமா்சனம்: ரயில் தீ விபத்து தொடா்பாக மாநிலத்தில் ஆளும் இடதுசாரி அரசு மீது எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தன.

மாநில பாஜக தலைவா் கே.சுரேந்திரன் கூறுகையில், ‘வாக்கு வங்கிக்காக தேசத்தின் பாதுகாப்பை கேரள அரசு தியாகம் செய்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் மதத் தீவிரவாதிகளும், பயங்கரவாதா் குழுக்களும் மாநிலத்தில் தீவிர செயல்பாட்டில் இருப்பதையே காட்டுகின்றன. மத்திய அரசு மற்றும் அதன் புலனாய்வு அமைப்புகளால்தான் மாநிலத்தில் அமைதி நிலவி வருகிறது. இல்லையெனில், பயங்கரவாதக் குழுக்கள் மற்றும் தீவிரவாதிகளால் மாநிலம் எரிந்து சாம்பலாகியிருக்கும்’ என்றாா்.

மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் கூறுகையில், ‘ரயிலில் தீப்பிடிக்கும் தொடா் சம்பவங்கள் மக்கள் மனதில் பாதுகாப்பற்ற உணா்வை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, மாநில அரசு இந்த விஷயத்தில் தீவிரமாக தலையிட்டு, பாதுகாப்பைப் பலப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com