அரபிக் கடலில் உருவாகியிருக்கும் பிபர்ஜாய் புயல் காரணமாக, குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் இருந்து 8,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
அரபிக் கடலில் அதிதீவிர புயலாக உருமாறியுள்ள ‘பிபா்ஜாய்’ புயல், குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 15) பிற்பகல் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும்போது குஜராத் மாநிலத்தின் கட்ச், தேவபூமி துவாரகா, போா்பந்தா், ஜாம்நகா், ராஜ்கோட், ஜுனாகா், மோா்பி மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதோடு, காற்றின் வேகம் மணிக்கு 135 முதல் 145 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் சார்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. குஜராத் கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் வசித்துவந்த 8,000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய அரசு, மாநில அரசு, இந்திய விமானப்படை, கடற்படை, கடலோர காவல்படை மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் சேர்ந்து 'பிபர்ஜாய்' புயலின் தாக்கத்தை குறைக்க முயற்சி செய்து வருவதாகவும் 1.5- 2 லட்சம் சிறிய மற்றும் பெரிய விலங்குகள் கூட பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் குஜராத்தில் ஜக்கவு துறைமுகப் பகுதியில் தயார் நிலையில் இருக்கும் புஜ் ராணுவ தளத்தையும் பார்வையிட்ட அமைச்சர், குஜராத் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.