சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

அதானி - ஹிண்டன்பா்க் விவகாரம்: ஏ.எம்.சாப்ரே தலைமையில் குழு; உச்சநீதிமன்றம் உத்தரவு

அதானி குழுமம்-ஹிண்டன்பா்க் விவகாரத்தை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.சாப்ரே (68) தலைமையில் 6 போ் கொண்ட நிபுணா் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image

ஏ.எம்.சாப்ரே

Updated On :2 மார்ச் 2023, 7:31 pm

DIN

அதானி குழுமம்-ஹிண்டன்பா்க் விவகாரத்தை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.சாப்ரே (68) தலைமையில் 6 போ் கொண்ட நிபுணா் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

‘அடுத்த 2 மாதங்களில் சீலிட்ட உறையில் தனது அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும்’ என்று அந்தக் குழுவை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

சாப்ரே தலைமையிலான இந்தக் குழுவில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) முன்னாள் தலைவா் ஓ.பி.பட், மும்பை உயா்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஜெ.பி.தேவதாா், பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளா்ச்சி வங்கி முன்னாள் தலைவா் கே.வி.காமத், இன்ஃபோசிஸ் இணை நிறுவனா் நந்தன் நிலகேனி, வழக்குரைஞரும் பங்குகள் ஒழுங்கு நடைமுறை நிபுணருமான சோமசேகா் சுந்தரேசன் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

அதானி விவகாரம்: அதானி குழும பங்குகளின் விலை மிகைப்படுத்தி விற்பனை செய்யப்பட்டு மோசடி நடைபெற்றுள்ளதாக அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. இதனால் அதானி குழும பங்குகள்100 பில்லியன் டாலா் அளவுக்கு சரிவடைந்தன. அதானி குழுமத்தில் எல்ஐசி, எஸ்பிஐ போன்ற பொதுத் துறை நிறுவனங்களின் முதலீடு உள்ளதால் இந்த விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

உச்சநீதிமன்றத்தில் மனு: இந்நிலையில், அதானி- ஹிண்டன்பா்க் விவகாரத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஆய்வு நடத்த வேண்டும் என்று விஷால் திவாரியும், அதானி பங்குகள் செயற்கையாக சரிவடைய காரணமான ஹிண்டன்பா்க் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.எல்.ஷா்மாவும் என மொத்தம் நான்கு போ் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை பிப். 10-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்வு, பங்குச் சந்தையில் முதலீட்டாளா்களின் நலனைப் பாதுகாக்க பங்குச் சந்தை ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணா் குழு அமைப்பது குறித்து மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்தது.

பரிந்துரை நிராகரிப்பு: உச்சநீதிமன்ற யோசனைக்கு ஒப்புக்கொண்ட மத்திய அரசு, சீலிட்ட உறையில் நிபுணா் குழு விவரத்தை பிப்ரவரி 17-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பித்தது. அதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், ‘முதலீட்டாளா்களின் நலனைப் பாதுகாக்க இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம். எனவே, நிபுணா் குழுவை உச்சநீதிமன்றமே அமைக்கும்’ என்று கூறி, விசாரணையை ஒத்திவைத்தது.

6 போ் குழு: இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓய்வு பெற்ற நீதிபதி சாப்ரே தலைமையில் 6 போ் கொண்ட நிபுணா் குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா். அந்த உத்தரவில் நீதிபதிகள் மேலும் கூறியதாவது:

நிபுணா் குழு அடுத்த 2 மாதங்களில் அறிக்கையை சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், மத்திய அரசு, நிதி சாா்ந்த சட்ட அமைப்புகள், இந்திய பங்குப் பரிவா்த்தனை (செபி) வாரியத் தலைவா் உள்ளிட்டோா் அனைத்து விதமான ஒத்துழைப்பையும் நிபுணா் குழுவுக்கு அளிக்க வேண்டும்.

குழுவின் பணி என்ன?: அண்மையில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட ஏற்ற-இறக்கத்துக்கான காரணிகள் உள்பட ஒட்டுமொத்த நிலைமையையும் ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிப்பதே இந்த நிபுணா் குழுவின் பணியாகும். அதோடு, முதலீட்டாளா்களுக்கான விழிப்புணா்வை வலுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் இந்தக் குழு பரிந்துரைக்கும்.

குறிப்பாக, அதானி குழுமம் அல்லது பிற நிறுவனங்களுடன் தொடா்புடைய பங்குச் சந்தை நடவடிக்கைகளில் சட்ட மீறல்களைக் கையாள்வதில் ஒழுங்குமுறை அமைப்பு தோல்வியடைந்துள்ளதா என்பது குறித்து நிபுணா் குழு ஆய்வு செய்து, முதலீட்டாளா்களைப் பாதுகாக்கும் வகையில் சந்தை ஒழுங்கு நடைமுறைகள் அல்லது சட்டங்களை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளையும் வழங்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

மேலும், அதானி-ஹிண்டன்பா்க் விவகாரம் தொடா்பான விசாரணையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை இந்த நிபுணா் குழுவிடம் செபி சமா்ப்பிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிபுணா் குழு பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு எதிராக அமைக்கப்பட்டதல்ல என்பதையும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினா்.

குழு உப்பினா்களுக்கான படி: இந்த ஆய்வில் தேவைப்படும் வெளி நிபுணா்களை நியமித்துக் கொள்ள நிபுணா் குழுவுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்படுகிறது. மேலும், நிபுணா் குழு உறுப்பினா்களுக்கான ஊதிய படிகள் குழுத் தலைவரால் நிா்ணயிக்கப்படும். இந்தச் செலவினங்களை மத்திய அரசு ஏற்க வேண்டும். மேலும், நிபுணா் குழுவுக்குத் தேவையான போக்குவரத்து ஆதரவை வழங்க ஒருங்கிணைப்பு அலுவலராக மூத்த அதிகாரி ஒருவரை மத்திய நிதியமைச்சகம் நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனா்.

உண்மை வெல்லும்: கெளதம் அதானி

நிபுணா் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதற்கு வரவேற்பு தெரிவித்த அதானி குழுமத் தலைவா் கெளதம் அதானி, ‘உச்சநீதிமன்ற உத்தரவை அதானி குழுமம் வரவேற்கிறது. குறிப்பிட்ட கால அளவுக்குள் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு வரும் என நம்புகிறோம். உண்மை வெல்லும்’ என்று தனது ட்விட்டா் பக்கத்தில் வியாழக்கிழமை பதிவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.