காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 72 பேரைக் கொன்றது பாஜக அரசு: அசோக் கெலாட்

மக்களிடம் தவறான தகவல்களைக் கூறி ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது என அசோக் கெலாட் தெரிவித்தார்.
காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 72 பேரைக் கொன்றது பாஜக அரசு: அசோக் கெலாட்
Published on
Updated on
1 min read

இட ஒதுக்கீடு கோரி போராடியவர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 72 பேரைக் கொன்றது பாஜக அரசு என்று ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸும், ஆட்சியைக் கைப்பற்ற பாஜகவும் கடுமையாக மோதி வருகின்றன. 

இந்நிலையில் வியாழக்கிழமை காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேசியதாவது, “ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக பாஜகவால் உருவாக்கப்பட்ட விவகாரமே மஹாதேவ் சூதாட்ட செயலியும், சிவப்பு டைரி விவகாரமும் ஆகும். 

இந்த இரண்டு விவகாரங்களும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியால் விசாரிக்கப்பட வேண்டும். ராஜேஷ் பைலட் குறித்து பேசுவதன் மூலம் குர்ஜார் சமூக மக்களைத் தூண்டிவிட முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. 

பாஜக ஆட்சியில் இட ஒதுக்கீடு கோரி போராடிய குர்ஜார் சமூகத்தை சேர்ந்த 72 பேர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தனர். இன்று அந்த சமூக மக்களுக்கு ஆதரவாக இருப்பதுபோல பாஜகவினர் பேசி வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை. குர்ஜார் சமூக மக்களுக்கு காங்கிரஸ் அரசு ஐந்து சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.” என்று தெரிவித்தார்.

ராஜஸ்தானில் நடந்த குற்றச்சம்பவங்களை செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரமாக கொடுத்துவரும் பாஜகவின் செயலைக் குறிப்பிட்ட அசோக் கெலாட், “சதிக் கோட்பாடுகளை உருவாக்கி மக்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் தேர்தலை வெல்ல நினைக்கிறது பாஜக” என்று கூறினார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சி ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட்டை தண்டித்து வருவதாக பிரதமர் மோடி புதன்கிழமை பேசியிருந்தார். அதையடுத்து சச்சின் பைலட், என்னைப் பற்றி எனது கட்சியைத் தவிர வேறு யாரும் கவலைப்பட தேவையில்லை என்று பதிலளித்தார்.

2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது. 73 தொகுதிகளில் மட்டும் வென்ற பாஜக எதிர்க்கட்சியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com