சுந்தரவன காப்பக வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்புப் பணி!

மேற்கு வங்க மாநிலத்திலுள்ள சுந்தரவன புலிகள் காப்பக வனப்பகுதிகளில்  புலிகள் கணக்கெடுக்கும் பணி நவ. 27 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலத்திலுள்ள சுந்தரவன புலிகள் காப்பக வனப்பகுதிகளில் புலிகளை கணக்கெடுக்கும் பணி  அடுத்த வாரம்   தொடங்கவுள்ளது.

தமிழகத்தில் முதுமலை புலிகள் காப்பகம் உள்பட புலிகள் வாழும் வனப்பகுதிகளில் அவற்றை கணக்கெடுக்கும் பணி வருடந்தோறும் மேற்கொள்ளப்படும். அந்த வகையில், புலிகள் அதிகம் வாழும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான சுந்தரவனக் காடுகளில்  வருடாந்திர புலிகள் கணக்கெடுப்புப் பணி நவம்பர் 27 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக அடுத்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக, சுந்தரவன புலிகள் காப்பக வனப்பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட 720 இடங்களில், மொத்தம் 1,500 கேமராக்கள் பொருத்தப்பட்டு புலிகள் நடமாட்டம் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் கணக்கெடுப்புப் பணியில் 40க்கும் அதிகமான வனத்துறை ஊழியர்களும், அவர்களுடன் அப்பகுதிகளை சேர்ந்த சில உள்ளூர்வாசிகளும் இணைந்து இந்த பணியை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு கேமரா தொழில்நுட்பம் குறித்த பயிற்சியளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

ஏறத்தாழ 10,200 சதுர கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்துள்ள சுந்தரவன புலிகள் காப்பகம், 100-க்கும் அதிகமான புலிகளின் வசிப்பிடமாக இருந்து வருகிறது. இந்தநிலையில், சுந்தரவன சுற்றுவட்டார பகுதிகளில் புலிகள் வேட்டையாடப்படுவதை தடுக்க வனத்துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு புலிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

வனப்பகுதியையொட்டி அமைந்திருக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புலிகள்  நுழைந்தால் அவற்றை கொல்லாமல் கையாள்வது குறித்தும் உள்ளூர்வாசிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, புலிகளுக்கு இரையாக வனப்பகுதிக்குள் மான்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற நடவடிக்கைகளால், கடந்த 2020 - 21 காலகட்டத்தில் 96 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை,  கடந்த ஆண்டு கணக்கெடுப்பின் போது  101 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

எனினும், சரணலாய எல்லையை தாண்டி, அருகாமை வனப்பகுதிகளுக்குள் புலிகள் செல்வதால், சுந்தரவன புலிகள் காப்பக வனப்பகுதிகளில் எத்தனை புலிகள் வசிக்கின்றன என்ற துல்லியமான எண்ணிக்கை, கணக்கெடுப்பின்போது தெரியவராது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், புலிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும், மேலும் அதிகரித்திருக்கக் கூடும் என்றே  எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com