
சென்னையிலிருந்து புறப்பட்ட பாரத் கௌரவ் ரயிலில் பயணித்த 80 பேருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. பலருக்கும் வயிற்றில் தொற்று பாதிப்பு, வாந்தி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டதால் சக பயணிகள் அச்சமடைந்தனர்.
ரயில் பயணிகள் சாப்பிட்ட உணவு கெட்டுப்போனதாக இருந்து, அதனால் பயணிகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ரயில் செவ்வாய்க்கிழமையன்று புனே ரயில் நிலையத்தை அடையும் நேரத்தில் பலருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு மருத்துவக் குழு வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இரவு 10 மணியளவில், புனே ரயில் நிலைய அதிகாரிகளுக்கு இது தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், தனியாரால் முன்பதிவு செய்யப்பட்டு, குஜராத் மாநிலத்தில் உள்ள வழிபாட்டுத் தலத்துக்குச் சென்றுகொண்டிருந்தவர்கள் பயணித்திருந்ததும் தெரிய வந்துள்ளது.
அந்த ரயிலில் சுமார் 1000 பேர் இருந்துள்ளனர். பலருக்கும் வயிற்றுப்போக்கு, மயக்கம், வயிற்றுவலி, வாந்தி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. ரயில் புனே ரயில் நிலையத்துக்கு வந்ததும் பாதிக்கப்பட்ட பயணிகள் நடைமேடைக்குக் கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றுள்ளது.
அந்த ரயிலில், எந்த உணவக வசதியும் இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். பயணிகள் நடுவழியில்தான் உணவு வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். அது எங்கிருந்து வந்தது என்பதை ஆராய்ந்து வருவதாகவும், இடையே சிலர் அன்னதானத்தை வாங்கிச் சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.