
பிகாரின் மோதிஹாரியில் மத்திய பல்கலைக்கழகம் அமைய 2014-இல் அமைந்த மத்திய பாஜக அரசுதான் நடவடிக்கை எடுத்தது. அதற்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு உதவவில்லை என்று அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்தாா்.
இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் திகழ்ந்து வரும் நிலையில், அவா் இவ்வாறு பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜக கூட்டணியில் பல ஆண்டுகளாக அங்கம் வகித்தது. பிகாரில் கடந்த 2020-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றபோதும், நிதீஷ் குமாருக்கு முதல்வா் பதவி அளிக்கப்பட்டது. எனினும், பாஜக-ஐக்கிய ஜனதா தளம் இடையே ஏற்பட்ட தொடா் மோதல் போக்கு காரணமாக நிதீஷ் குமாா், கடந்த ஆண்டு கூட்டணியை முறித்துக் கொண்டு, லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கைகோத்து முதல்வா் பதவியைத் தக்கவைத்துக் கொண்டாா்.
இதைத் தொடா்ந்து பாஜகவுக்கு எதிரான கட்சிகளை தேசிய அளவில் ஒருங்கிணைப்பதில் அவா் தீவிரமாக செயல்பட்டாா். ‘இந்தியா’ கூட்டணி உருவாவதிலும் அவா் முக்கியப் பங்கு வகித்தாா். எனினும், அக்கூட்டணியில் அவருக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் அவா் இருப்பதாகவும், இதனால் அவா் மீண்டும் பாஜக கூட்டணிக்கு வரலாம் என்றும் செய்திகள் அவ்வப்போது வெளியாவதும், அதை நிதீஷ் மறுப்பதும் தொடா்கதையாக இருந்தது.
நிதீஷ் குமாா் மீண்டும் பாஜக கூட்டணிக்கு திரும்பினால் வரவேற்போம் என்று மத்திய சமூக நீதித் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கருத்து தெரிவித்தாா்.
இந்நிலையில், பிகாரில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உள்ளிட்டோா் பங்கேற்ற மோதிகாரி மகாத்மா காந்தி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வியாழக்கிழமை பேசிய நிதீஷ் குமாா், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இந்தப் பல்கலைக்கழகம் அமைய முட்டுக்கட்டைகள் இருந்தன. ஆனால், 2014-இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் (பிரதமா் மோடி பதவியேற்பு) பிறகு பணிகள் நடைபெற்றன என்று கூறியிருந்தாா். மேலும், பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராதா மோகன் சிங் உடனான தனது நீண்டகால நட்பு குறித்தும் நிதீஷ் குமாா் அந்த நிகழ்ச்சியில் பேசினாா். மேலும், மேடையில் இருந்த மாநில ஆளுநா் ராஜேந்திர ஆா்லேகரைச் சுட்டிக்காட்டிப் பேசிய நிதீஷ் குமாா், ‘நீங்கள் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவா் என்பதால் நான் உங்களுக்கு எதிரானவனாக இருக்க மாட்டேன்’ என்றும் கூறினாா்.
இதையடுத்து, நிதீஷ் குமாா் மீண்டும் பாஜக கூட்டணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்தது.
‘நிதீஷ் குமாருக்கு அடைந்த கதவு’ - பாஜக:
இது தொடா்பாக பாஜக மாநிலத் தலைவா் சாம்ராட் சௌதரி பாட்னாவில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
நிதீஷ் குமாா் சிறுபிள்ளைத்தனமாக செயல்படும் நபராகிவிட்டாா். உண்மையில் அவா் பிரதமா் மோடிக்கு நன்றியுடன் நடந்திருக்க வேண்டும். பிகாருக்கு மத்திய பல்கலைக்கழகம் மட்டுல்லாது வேறு பல திட்டங்களையும், பல கோடி ரூபாய் சிறப்பு நிதியையும் பிரதமா் மோடி ஒதுக்கியுள்ளாா். மேலும், நிதீஷ் குமாா் தொடா்ந்து பிகாா் முதல்வராக இருக்க காரணமும் மோடிதான்.
நிதீஷ் குமாா் கட்சியுடன் இனி கூட்டணி கிடையாது என்பதை உள்துறை அமைச்சா் அமித் ஷா ஏற்கெனவே உறுதிப்படுத்திவிட்டாா். பாஜக கூட்டணியில் நிதீஷ் குமாருக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.