மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை கொண்டுவருவதில் ஏன் இவ்வளவு தாமதம்? என மக்களவையில் மசோதா மீது திமுக எம்.பி. கனிமொழி பேசினார்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் நேற்று(செப். 19) மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார்.
தொடர்ந்து இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
இதில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, 'மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையும் பாஜக அரசியலுக்குப் பயன்படுத்துகிறது. மகளிர் மசோதாவை தாக்கல் செய்வதில் ஏன் இவ்வளவு தாமதம்? மேலும் இது ரகசியமாக கொண்டுவரப்பட்டுள்ளது. எந்த அரசியல் கட்சிகளுடனும் இதுகுறித்து ஆலோசிக்கவில்லை. எதற்காக சிறப்புக் கூட்டத்தொடர் என்று கூறவில்லை, அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் இந்த மசோதா குறித்து பேசவில்லை, எந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தெரிவிக்கவில்லை.
இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வர வேண்டும் என்று நானே பலமுறை நாடாளுமன்றத்தில் கோரியிருக்கிறேன். அப்போது மசோதாவை கொண்டுவருவதற்கு முன் அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்து ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என்று கூறினர். அவ்வாறு இப்போது என்ன ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்டது என்பதை அறிய விரும்புகிறேன்.
இந்தியாவிலேயே முதல் முறையாக 1921 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டு பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது நீதிக்கட்சி. நாட்டில் முதல் சட்டப்பேரவை உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டது 1927ல்தமிழ்நாடு சட்டப்பேரவையில்தான். கடந்த 100 ஆண்டுகளாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படவில்லை.
1996ல் திமுக அரசு ஆதரவுடன் மத்தியில் மகளிர் மசோதா கொண்டுவரப்பட்டது. 2010ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மாநிலங்களவையில் இதனை நிறைவேற்றியது.
2010ல் மாநிலங்களவையில் இந்த மசோதா குறித்துப் பேசினேன். தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த மக்களவையில் அதே மசோதா குறித்துப் பேசி வருகிறேன்.
2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் இந்த மசோதாவை நிறைவேற்றக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினார்கள். இதற்காக திமுக தில்லியில் பேரணி நடத்தியுள்ளது.
தற்போது பாஜக அரசு அரசியல் வாக்குறுதியாக இதனை கொண்டு வருகிறது. தற்போதைய மசோதாவை அமல்படுத்துவதில் நிபந்தனைகள் உள்ளன. தொகுதி மறுவரையறை, மக்கள்தொகை கணக்கெடுப்பு என்று கால தாமதம் செய்வது ஏன்?' என்று பேசினார்.
மேலும் 'ஒரு ஆண் தைரியமாக இருந்தால் கடவுளாக பார்க்கப்படுகிறார். ஆனால் ஒரு பெண் தைரியமாக இருந்தால் பேயாகத்தான் பார்க்கப்படுகிறார். இந்தியாவில் எத்தனை வலிமை மிகு பெண் தலைவர்கள் இருந்துள்ளனர், இருக்கின்றனர். இந்திரா காந்தி, சுஷ்மா சுவராஜ், சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, ஏன் ஜெயலலிதா வலிமைமிக்க தலைவர்தான். அதை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை' என்றார்.
'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்' என்ற பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டியும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்த பெரியாரின் கூற்றை மேற்கோள் காட்டியும் கனிமொழி பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.