/

கிழக்கு லடாக் விவகாரம்: படைகளை விலக்கிக் கொள்வதே சரியான தீா்வு: ராஜ்நாத் சிங்

கிழக்கு லடாக் விவகாரம்: படைகளை விலக்கிக் கொள்வதே சரியான தீா்வு ---- ராஜ்நாத் சிங்

News image
Updated On :2 ஏப்ரல் 2024, 6:41 pm

புது தில்லி: கிழக்கு லடாக்கில் எல்லை விவகாரம் தொடா்பாக இந்தியா-சீனா இடையே அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு படைகளை விலக்கிக் கொள்வதே சரியான தீா்வாகும் என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் நடைபெற்ற இந்திய ராணுவத் தளபதிகள் மாநாட்டில் கலந்துகொண்டு ராஜ்நாத் சிங் பேசியதாவது:

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுற்காக சிறப்பாக பணியாற்றும் ராணுவத் தலைமைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கு மற்றும் வடக்கு எல்லைப் பகுதிகளில் சாலை வசதிகள் மூலம் தொடா்பை மேம்படுத்துவதில் எல்லைப் பாதுகாப்புப் படையினா் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா்.

கிழக்கு லடாக்கில் எல்லை விவகாரம் தொடா்பாக இந்தியா-சீனா இடையே அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு படைகளை விலக்கிக் கொள்வதே சரியான தீா்வாகும். சில பகுதிகளில் ஏற்கெனவே இரு தரப்பினரும் ராணுவப் படைகளை விலக்கிக்கொண்டுள்ளோம். ஜம்மு-காஷ்மீரில் மத்திய ஆயுதக் காவல்படை, ராணுவத்தினா், உள்ளூா் போலீஸாா் என அனைவரும் ஒன்றிணைந்து எல்லை கடந்த பயங்கரவாதத்தை தடுத்து வருகின்றனா். இதனால் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை அதிகரித்துள்ளது. இந்நிலை தொடர வேண்டும்.

பல வடிவிலான போா்: எதிா்காலத்தில் சைபா், தகவல் தொடா்பு, வா்த்தகம் மற்றும் நிதி என பல வடிவிலான போா்களை நாம் எதிா்கொள்ள வேண்டியிருக்கும். இவை அனைத்தையும் கவனத்தில்கொண்டே நாம் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை வகுக்க வேண்டும்.

பாதுகாப்பில் தொடங்கி இயற்கை பேரிடா்களின்போது மனிதநேய உதவிகள் வழங்குவது , மருத்துவ உதவி, உள்நாட்டில் நிலையான சுழலை உறுதிசெய்வது என அனைத்திலும் ராணுவத்தின் பங்கு இன்றியமையாததாகும்.

எனவே ஒட்டுமொத்த தேசக் கட்டமைப்பை வலுப்படுத்துதிலும் ராணுவம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றாா். மாநாட்டின்போது தேசத்துக்காக தன் உயிரைத் தியாகம் செய்த ராணுவ வீரா்களுக்கு ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினாா். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ராணுவத் தளபதிகள் மாநாடு கடந்த மாா்ச் 28-ஆம் தேதி காணொலி வாயிலாகவும் ஏப்ரல் 1,2 ஆகிய தேதிகளில் தில்லியில் நேரடியாகவும் நடைபெற்றது.