
மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொட்டு அடித்து வாக்கு சேகரிப்பது, பட்டுப்பாடி ஆட்டம் ஆடி வாக்கு சேகரிப்பது என வேட்பாளர்கள் பலரும் விதவிதமான முயற்சிகளில் வாக்கு சேகரிப்பதை கான முடிகிறது.
இந்நிலையில், ஒடிஸாவில் ’சங்கு’ முழங்கி, ஆளுங்கட்சி வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பழங்குடியின மக்கள் அதிகளவில் வசிக்கும் ஒடிஸாவில் மொத்தமுள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், 21 மக்களவைத் தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு மே 13-ஆம் தேதி நடைபெறுகிறது.ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியின் ’சங்கு’ சின்னத்தில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்கள் பலரும், தங்கள் தொகுதிகளில் சங்கு முழங்கி பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். சங்கு சத்தம் காதைக் கிழிக்கிறது ஒடிஸாவில்.
பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக இருந்தாலும், மக்களிடம் நன்கு அறிமுகமான தங்கள் கட்சியின் ’சங்கு’ சின்னத்தை, எளிய முறையில் அவர்களிடம் கொண்டு சேர்க்க இந்த முயற்சியில் வேட்பாளர்கள் இறங்கியுள்ளனர். இதற்காக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவாக சங்கு முழங்குவதற்கென தனியாக சிலரை தங்களுடன் அழைத்துச் செல்வதை காண முடிகிறது.
தேர்தல் பரப்புரையின்போது, பழங்குடியின பாரம்பரிய மஞ்சள் அல்லது பச்சை ஆடை அணிந்து, தலையில் முண்டாசுக் கட்டிக்கொண்டு தெருக்களில் வலம் வரும் இந்த நபர்கள், சங்கு முழங்கிக்கொண்டு வேட்பாளர்களை மக்களிடம் அறிமுகப்படுத்துவதை காண முடிகிறது.
இந்த நிலையில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவாக சங்கு முழங்குவதற்கு ஆள் கிடைக்காமல் பலர் தவிப்பதாய் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒடிஸாவில் வேட்புமனு தாக்கல் செய்ய இம்மாதம் 25-ஆம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் அதன் பின்னர் வேட்பாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து, தேர்தல் பரப்புரையில் ஈடுபட சங்கு ஊதுவோரின் எண்ணிக்கை அதிகளவில் தேவைப்படுமென பாரம்பரியமாக சங்கு முழங்கும் பணியில் ஈடுபட்டு வருவோர் தெரிவிக்கின்றனர்.
ஒடிஸாவின் கஞ்சம் மாவட்டத்தில் பாரம்பரியமாக சங்கு முழங்குவோர் எண்ணிக்கை சுமார் 25 ஆயிரத்தை தாண்டும் எனக் கூறப்படுகிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமில்லாமல், யாராக இருந்தாலும், அவர்களுக்காக தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதை இவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஒடிஸாவில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுவதால், அதற்கேற்ப திட்டம் வகுத்து வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.