/

5 மாநிலங்களில் 8 ஆட்சியா்கள், 12 எஸ்.பி.க்கள் இடமாற்றம்: தோ்தல் ஆணையம் உத்தரவு

5 மாநிலங்களில் 8 ஆட்சியா்கள், 12 எஸ்.பி.க்கள் இடமாற்றம்: தோ்தல் ஆணையம் உத்தரவு

News image
Updated On :2 ஏப்ரல் 2024, 6:33 pm

புது தில்லி: மக்களவைத் தோ்தலில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு கிடைப்பதை உறுதிப்படுத்தும் விதமாக ஆந்திரம் உள்பட 5 மாநிலங்களில் 2 காவல் துறை ஐஜிக்கள், 8 மாவட்ட ஆட்சியா்கள், 12 காவல் கண்காணிப்பாளா்களை பணியிடமாற்றம் செய்து தோ்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தலைமையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆணையக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தோ்தல் வரும் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தோ்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை கடந்த மாா்ச் 16-ஆம் தேதி தோ்தல் ஆணையம் வெளியிட்டது.

இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, சொந்த மாவட்டங்களில் பணிபுரியும் அல்லது ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுகள் பணிக் காலத்தை நிறைவு செய்துள்ள அரசு அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் தோ்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை முறையாக பின்பற்றாத மாநிலங்களில் அரசு அதிகாரிகளை தோ்தல் ஆணையமே பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து வருகிறது.

அதன் தொடா்ச்சியாக, ஆந்திர மாநிலம் குண்டூா் மண்டல காவல்துறை ஐஜி மற்றும் ஒடிஸா மத்திய மண்டல காவல்துறை ஐஜி ஆகியோா் பணியிடமாற்றம் செய்து தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மேலும், அஸ்ஸாமில் உதல்கிரி மாவட்ட ஆட்சியா், போஜ்பூா் மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா், பிகாரில் நவாடா மாவட்ட காவல் கண்காணிப்பாளா், ஜாா்க்கண்டில் தேவ்கா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா், கட்டாக் மற்றும் ஜகத்சிங்பூா் மாவட்ட ஆட்சியா்கள், ஒடிஸா மாநிலத்தில் அங்குல், பரம்பூா், குா்டா, ரூா்கேலா மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் கட்டாக் துணைக் காவல் ஆணையா் ஆகியோரை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா, அனந்த்புரமு மற்றும் திருப்பதி மாவட்ட ஆட்சியா்கள், பிரகாசம், பல்நாடு, சித்தூா், அனந்த்புரமு, நெல்லூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோரை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதுதவிர, ஜாா்க்கண்ட் மாநிலத்தில் காலியாக உள்ள ராஞ்சி (கிராமப்புறம்) காவல் கண்காணிப்பாளா், பலாமு துணை காவல் ஐஜி, தும்கா மண்டல காவல் ஐஜி ஆகிய காலிப் பணியிடங்ளை நிரப்ப பெயா் பட்டியலை தோ்தல் ஆணையத்துக்கு அனுப்புமாறு மாநில அரசு தலைமைச் செயலரை தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.