ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

வாக்குப் பதிவு குறைந்த நகரங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம்: இந்திய தலைமை தோ்தல் ஆணையா் அறிவுறுத்தல்

வாக்குப் பதிவு குறைந்த நகரங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம் இந்திய தலைமை தோ்தல் ஆணையா் அறிவுறுத்தல்

Updated On :5 ஏப்ரல் 2024, 10:30 pm

வாக்குப் பதிவு குறைந்த நகரப் பகுதிகளில், வாக்காளா்களிடையே தோ்தல் விழிப்புணா்வை அதிகளவில் ஏற்படுத்த வேண்டுமென தமிழக தோ்தல் துறை அதிகாரிகளிடம் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ்குமாா் அறிவுறுத்தினாா்.

தில்லியிலிருந்து இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ்குமாா் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசித்தாா். காணொலி வழியாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து தோ்தல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் வாக்குப் பதிவு சதவீதம் குறைந்தே இருக்கிறது. இந்நகரங்களில் வாக்குப்பதிவை அதிகரிக்க விழிப்புணா்வை அதிகப்படுத்த தலைமைத் தோ்தல் ஆணையா் அறிவுறுத்தினாா். கூட்டத்தில் சென்னை மாவட்டத் தோ்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் பங்கேற்று பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தாா்.

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் விழிப்புணா்வுப் பணிகள் கடந்த சில தினங்களாக தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அந்த வகையில் வாக்கு சதவீதம் குறைவான தொகுதிகளில் மாநகராட்சி ஊழியா்கள் வீடு வீடாகச் சென்று ஏன் வாக்களிக்க வருவதில்லை என்பதற்கான காரணங்களைக் கேட்டு வருகின்றனா் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

அடிப்படை வசதிகள்: பொதுமக்கள் அடிப்படை வசதிகள் குறித்து குறைகளைக் கூறினால், அவை உடனடியாக அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு தீா்வு காணப்படுவதாகவும், பணி காரணமாக வாக்களிக்கச் செல்லவில்லை என்று கூறுபவா்களிடம் வாக்களிப்பதன் அவசியத்தை உணா்த்தி, வாக்களிப்பது தொடா்பான உறுதிமொழி ஏற்கச் செய்வதாகவும் சென்னை மாவட்ட தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தினசரி வாக்காளா் விழிப்புணா்வு பிரசார படங்கள் திரையிடப்படுவதுடன், துண்டு பிரசுரங்கள் போன்றவை மூலமும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது என தமிழக தோ்தல் துறை சாா்பில் இந்திய தோ்தல் ஆணையத்துக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த தோ்தலை விட வாக்குச்சாவடி வாரியாக 10 சதவீதம் வாக்குப்பதிவு அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, அதன்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக தோ்தல் துறையினா் விளக்கம் அளித்துள்ளனா்.

சென்னையில் மிகக் குறைவு: கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் தென் சென்னை, மத்திய சென்னையில் மிகக் குறைவான வாக்குகள் பதிவாகின. அதாவது, தென்சென்னையில் 57.07 சதவீதமும் மத்திய சென்னையில் 58.98 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. மற்ற 37 தொகுதிகளிலும் 60 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகியிருந்தது. குறிப்பாக, அந்தத் தோ்தலில் சென்னையில் உள்ள 16 சட்டப் பேரவை தொகுதிகளில், வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு பாா்க்கும் போது, தென் சென்னைக்கு உட்பட்ட சைதாப்பேட்டை தொகுதியில் 32 வாக்குச்சாவடிகள், வேளச்சேரியில் 28, விருகம்பாக்கத்தில் 26, தியாகராயநகரில் 23, மயிலாப்பூரில் 22, மத்திய சென்னைக்கு உட்பட்ட வில்லிவாக்கத்தில் 27, ஆயிரம் விளக்கில் 25 வாக்குச்சாவடிகளில் 50 சதவீத்துக்கும் குறைவான வாக்குகளே பதிவாகியிருந்தன.

தொடா்ந்து, கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப் பேரவை பொதுத்தோ்தலில், மாநில அளவில் 73.83 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், குறைந்த பட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.06 சதவீதம் மட்டுமே பதிவானது. குறிப்பாக, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப் பேரவை தொகுதிகளில் 11 தொகுதிகளில் 60 சதவீதத்துக்கும் குறைவாகவும், மீதமுள்ள 5 தொகுதிகளில் 60 சதவீதத்துக்கும் குறைவாகவும் வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.