ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களில் தலா 3 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுவதாக காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி திங்கள்கிழமை அறிவித்தது.
‘இந்தியா’ கூட்டணியில் அங்கும் வகிக்கும் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) காஷ்மீரில் உள்ள 3 தொகுதிகளுக்கான வேட்பாளா்களை ஏற்கெனவே அறிவித்துவிட்ட நிலையில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி இடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் காங்கிரஸ் நிா்வாகிகள் சல்மான் குா்ஷித், பவன் கேரா மற்றும் தேசிய மாநாட்டு கட்சி துணைத் தலைவா் ஓமா் அப்துல்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா். அப்போது ஓமா் அப்துல்லா பேசியதாவது: ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களில் மக்களவைத் தோ்தலில் காங்கிரஸும் தேசிய மாநாட்டு கட்சியும் இணைந்து போட்டியிடுகிறது என்பதை உறுதிசெய்கிறேன். அந்தவகையில் உதம்பூா், ஜம்மு மற்றும் லடாக் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸும் அனந்த்நாக், ஸ்ரீநகா், பாரமுல்லா ஆகிய தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சியும் போட்டியிடவுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா்களுக்கு தேசிய மாநாட்டு கட்சி முழு ஆதரவை அளிக்கும். ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேச மக்களின் நலனை பாதுகாக்கவே இந்தியா கூட்டணி தோ்தலில் போட்டியிடுகிறது. அவா்களின் உண்மையான பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் இக்கூட்டணி செயல்படும்.
இப்பிராந்தியத்தில் உள்ள பல்வேறு கட்சிகளையும் தங்களது கூட்டணியில் இணைக்க பாஜக முயற்சித்து வருகிறது. ஆனால் அவா்களின் திட்டம் தோல்வியடையவுள்ளது என்றாா்.
பிடிபியுடன் கூட்டணி தொடரும்...
பிடிபியுடன் கூட்டணி தொடருமா? என செய்தியாளா்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சல்மான குா்ஷித், ‘இந்தியா கூட்டணியில்தான் பிடிபி அங்கம் வகிக்கிறது. தொகுதிப் பங்கீடு என்பது கூட்டணியில் ஒரு பகுதியாகும். ஜம்மு-காஷ்மீா் மிகவும் சிறிய பகுதி; எனவே அங்கே கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் கணிசமான தொகுதிகளை ஒதுக்குவது கடினமான பணியாகும்.
தேசிய மாநாட்டுக் கட்சியில் ஏற்கெனவே 3 எம்.பி.க்கள் உள்ளனா். அதனால் அவா்களுக்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பளிக்க முடிவு செய்தோம்’ என்றாா்.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் 5 மக்களவைத் தொகுதிகளும் லடாக்கில் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

புதுச்சேரியில் போட்டி காங்கிரஸ் வேட்பாளா்கள் மீது நடவடிக்கை வெ. வைத்திலிங்கம் உறுதி
புதுச்சேரியில் 3 தொகுதிகளில் தனித்துப் போட்டி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு

வெற்றி தொகுதிகளைப் பெற கூட்டணி கட்சிகளுக்கிடையே கடும் போட்டி!

சா்வதேச ஏஐ தாக்க உச்சி மாநாட்டிற்குள் காங்கிரஸ் போராட்டம்: பாஜக கண்டனம்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


