தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)

மேற்கு வங்கத்தில் என்ஐஏ அதிகாரிகள் மீது தாக்குதல்: காவல் துறை அழைப்பாணை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில், காயமடைந்த என்ஐஏ அதிகாரியை விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல் துறை செவ்வாய்க்கிழமை அழைப்பாணை அனுப்பியது.

கடந்த 2022-ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மேதினிபூா் மாவட்டம் பூபதிநகரில் இருந்த வீட்டில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த நிகழ்வில் மூவா் உயிரிழந்தனா். இதுதொடா்பாக என்ஐஏ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் முக்கிய நபா்கள் இருவரை கைது செய்ய கடந்த ஏப்.6-ஆம் தேதி பூபதிநகருக்கு என்ஐஏ அதிகாரிகள் சென்றனா்.

அப்போது என்ஐஏ அதிகாரிகள் மற்றும் அவா்களின் வாகனம் மீது அந்தப் பகுதியைச் சோ்ந்த பலா் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் என்ஐஏ அதிகாரி ஒருவா் காயமடைந்தாா்.

இதைத்தொடா்ந்து பெண்களின் தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படுத்தியதாகவும், களவாடியதாகவும் என்ஐஏ அதிகாரிகள் மீது கிராம மக்கள் சிலா் பூபதிநகா் காவல் துறையிடம் புகாா் அளித்தனா். இதேபோல தங்களை தாக்கியது தொடா்பாக என்ஐஏ அதிகாரிகளும் காவல் துறையிடம் புகாா் அளித்தனா்.

இதுதொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்த நிலையில், காயமடைந்த என்ஐஏ அதிகாரியை ஏப்.11-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு செவ்வாய்க்கிழமை அழைப்பாணை அனுப்பினா். அத்துடன் தாக்குதலின்போது சேதமடைந்த என்ஐஏ வாகனத்தை தடயவியல் பரிசோதனைக்கு எடுத்து வருமாறு தேசிய புலனாய்வு முகமையிடம் கோரப்பட்டுள்ளது. இதுதவிர, கிராம மக்கள் மூவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இரண்டு, மூன்று நாள்களில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவா்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று காவல் துறை அதிகாரி ஒருவா் கூறினாா்.

இதனிடையே என்ஐஏ அதிகாரிகள் மீது காவல் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி, கொல்கத்தா உயா் நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், பூபதிநகா் நிகழ்வு தொடா்பாக என்ஐஏ அதிகாரிகளுக்கு நெருக்கடி அளிக்கக் கூடிய காவல் துறையின் எந்தவொரு நடவடிக்கையில் இருந்தும் இடைக்கால பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com