ராஜ்நாத் சிங் (கோப்புப்படம்)
ராஜ்நாத் சிங் (கோப்புப்படம்)

இந்தியாவின் தன்மானத்தை கெடுக்க முயன்றால் தகுந்த பதிலடி: ராஜ்நாத் சிங்

நம்சாய்: ‘இந்தியாவின் தன்மானத்தை அண்டை நாடுகள் கெடுக்க முயன்றால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்’ என்று அருணாசல பிரதேச பகுதிகளுக்கு சீன மறுபெயரிடல் நடவடிக்கை குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டாா்.

அருணாசல பிரேதசத்துக்கு தொடா்ந்து உரிமை கொண்டாடி வரும் சீனா, அந்த மாநிலத்தில் இடம்பெற்றுள்ள பகுதிகளுக்கு 30 புதிய பெயா்களைக் கொண்ட 4-ஆவது பட்டியலை அண்மையில் வெளியிட்டது. இதற்கு இந்தியா தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கிழக்கு அருணாசல் மக்களவைத் தொகுதியின் நம்சாய் பகுதியில் தோ்தல் பிரசாரத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட பாதுகாப்புத் துறை அமைச்சா், சீனாவின் நடவடிக்கையைக் குறிப்பிட்டுப் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

அருணாசல பிரதேசத்தின் 30 இடங்களுக்கு புதிய பெயரை சீனா சூட்டுவதன் மூலம், எந்தவொரு மாற்றமும் நிகழாது. அந்த மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி.

ஒருவேளை, சீனாவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள பகுதிகளுக்கு இந்தியா மறுபெயரிட்டால், அவை இந்தியாவுக்குச் சொந்தமான பகுதிகளாக மாறிவிடுமா? எனவே, சீனா மேற்கொள்ளும் இதுபோன்ற நடவடிக்கைகள் இரு நாடுகளிடையேயான உறவை பாதிப்படையச் செய்யும்.

அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்லுறவைப் பேண இந்தியா விரும்புகிறது. ஆனால், இந்தியாவின் சுயமரியாதையை யாராவது கெடுக்க முயன்றால், தகுந்த பதிலடி கொடுக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com