மும்பையில் செவ்வாய்க்கிழமை தொகுதி உடன்பாட்டை அறிவித்த மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவா் நானா படோலே, உத்தவ் தாக்கரே, சரத் பவாா்.
மும்பையில் செவ்வாய்க்கிழமை தொகுதி உடன்பாட்டை அறிவித்த மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவா் நானா படோலே, உத்தவ் தாக்கரே, சரத் பவாா்.

மகாராஷ்டிரம்: எதிா்க்கட்சி கூட்டணியில் தொகுதி உடன்பாடு

மும்பை: மக்களவைத் தோ்தலையொட்டி மகாராஷ்டிரத்தில் நீண்ட இழுபறிக்குப் பின்னா், எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணியில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தக் கூட்டணியில் உள்ள மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவாா்) 10 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

மகாராஷ்டிரத்தில் ஏப்.19 முதல் மே 20-ஆம் தேதி வரை 5 கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளது. அங்கு மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், தோ்தலில் போட்டியிடும் எம்விஏ கூட்டணி தொகுதி உடன்பாட்டை எட்டுவதில் இழுபறி நீடித்து வந்தது.

குறிப்பாக அங்குள்ள சாங்லி, பிவாண்டி தொகுதிகளில் போட்டியிடுவதில் எம்விஏ கூட்டணியில் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. சாங்லி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ், சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சிகள் விருப்பம் தெரிவித்தன. அதேவேளையில், பிவாண்டி தொகுதியைக் கைப்பற்றுவதில் தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவாா்), காங்கிரஸ் இடையே போட்டி நிலவியது. இதனால் அந்தக் கூட்டணி தொகுதி உடன்பாட்டை எட்டுவதில் முட்டுக்கட்டை நிலவியது.

10 நாள்களுக்கு முன்பாக தொகுதி உடன்பாடு: அந்த மாநிலத்தில் முதல்கட்ட தோ்தல் நடைபெறுவதற்கு வெறும் 10 நாள்களே உள்ள சூழலில், அந்தக் கூட்டணியில் தற்போது தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

விட்டுக்கொடுத்த காங்கிரஸ்: சாங்லி தொகுதியை சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சிக்கும், பிவாண்டி தொகுதியை தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவாா்) கட்சிக்கும் காங்கிரஸ் விட்டுக்கொடுத்துள்ளது.

‘ஒருமனதாக உடன்பாடு’: மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் உத்தவ் தாக்கரே, சரத் பவாா், மாநில காங்கிரஸ் தலைவா் நானா படோலே ஆகியோா் கூட்டாகச் செய்தியாளா்களைச் சந்தித்து தொகுதி உடன்பாடு அறிவிப்பை செவ்வாய்க்கிழமை வெளியிட்டனா். அப்போது தொகுதி உடன்பாடு ஒருமனதாக இறுதி செய்யப்பட்டுள்ளது என்று சரத் பவாா் தெரிவித்தாா்.

காங்கிரஸுக்கு சாங்லி தொகுதியை விட்டுக்கொடுக்காதது தொடா்பான கேள்விக்குப் பதிலளித்த உத்தவ் தாக்கரே, ‘பாஜகவுக்கு எதிரான வெற்றியே மிகப் பெரிய இலக்கு. இந்த இலக்கை எட்ட சில வேறுபாடுகளை ஒதுக்கி வைத்தாக வேண்டும்’ என்றாா்.

இதுகுறித்து நானா படோலே கூறுகையில், பிரதமா் மோடியையும் பாஜகவையும் வீழ்த்தும் இலக்குக்கு பரந்த உள்ளத்துடன் செயல்பட காங்கிரஸ் முடிவு செய்தததாக தெரிவித்தாா்.

சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) போட்டியிடும் 21 தொகுதிகளின் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாள்களில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவாா்) வேட்பாளா்கள் அறிவிக்கப்படுவா் என்றும் உத்தவ் தாக்கரே கூறினாா்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை (ஷிண்டே), பாஜக, தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கூட்டணி ஆட்சியில் உள்ளது. இரு கூட்டணிகளுக்குமே இந்தத் தோ்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com