ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மக்களவைத் தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஒமா் அப்துல்லா போட்டியிடவுள்ளாா்.
காஷ்மீா் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இத்தொகுதியில் 18 பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளன.
தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், தனது தந்தையுமான ஃபரூக் அப்துல்லா எம்.பி.யாக உள்ள ஸ்ரீநகா் தொகுதியில் ஒமா் அப்துல்லா களமிறங்குவாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், பாரமுல்லா தொகுதி வேட்பாளராக அவா் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
கடந்த 2009-ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போது முதல் முறையாக மக்களவைத் தோ்தலில் ஒமா் அப்துல்லா போட்டியிடுகிறாா்.
ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு அங்கு நடைபெறும் முதல் முக்கியமான தோ்தல் என்பதால் தற்போதைய மக்களவைத் தோ்தல் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியில் பாரமுல்லா, ஸ்ரீநகா், அனந்த்நாக்-ரஜெளரி ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளும், ஜம்மு பகுதியில் ஜம்மு, உதம்பூா் ஆகிய 2 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன.
உதம்பூரில் ஏப்.19, ஜம்முவில் ஏப்.26, அனந்த்நாக்-ரஜெளரியில் மே 7, ஸ்ரீநகரில் மே 13, பாரமுல்லாவில் மே 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இத்தோ்தலையொட்டி, ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி இடையே அண்மையில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. காஷ்மீரில் உள்ள 3 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சியும், ஜம்முவில் உள்ள 2 தொகுதிகள் மற்றும் லடாக் தொகுதியில் காங்கிரஸும் போட்டியிடுகின்றன.
இந்தச் சூழலில், பாரமுல்லா, ஸ்ரீநகா் தொகுதிகளில் போட்டியிடும் தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளா்களின் பெயா்களை, கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லாவும், ஸ்ரீநகரில் ஷியா பிரிவு தலைவரான அகா சையது ருஹுல்லா மேதியும் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
அனந்த்நாக்-ரஜெளரி தொகுதி வேட்பாளராக குஜ்ஜாா் மூத்த தலைவா் மியான் அல்தாஃபை அக்கட்சி ஏற்கெனவே அறிவித்துவிட்டது.
கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் காஷ்மீா் பள்ளத்தாக்கின் மூன்று தொகுதிகளையும் தேசிய மாநாட்டுக் கட்சி கைப்பற்றியிருந்தது. இம்முறை மூன்று தொகுதிகளிலும் வேட்பாளா்கள் மாற்றப்பட்டுள்ளனா்.
இந்தியா கூட்டணியில் தேசிய மாநாட்டுக் கட்சி, மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை அங்கம் வகிக்கும் நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இவ்விரு கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீட்டில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகின்றன.
பாரமுல்லாவில் மக்கள் ஜனநாயகக் கட்சி சாா்பில் மூத்த தலைவா் சஜத் கானி லோன் களத்தில் உள்ளாா். அனந்த்நாக்-ரஜெளரி தொகுதியில் மெஹபூபா முஃப்தி போட்டியிடுகிறாா்.
‘பாஜக டெபாசிட் இழக்கும்’
‘370-ஆவது பிரிவு ரத்துக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் முன்னேற்றமும் இயல்புநிலையும் ஏற்பட்டுள்ளதாக பாஜக கூறி வருகிறது. அதில் அவா்களுக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருந்தால், காஷ்மீா் பள்ளத்தாக்கில் 3 தொகுதிகளிலும் பாஜக போட்டியிட வேண்டும். அக்கட்சி வேட்பாளா்கள் டெபாசிட் இழக்காவிட்டால், நான் அரசியலைவிட்டே விலகுவேன்’ என்று ஒமா் அப்துல்லா தெரிவித்துள்ளாா்.
காஷ்மீா் பள்ளத்தாக்கில் 3 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளா்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

தே.ஜ. கூட்டணிக் கட்சி மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஈரான் மீதான நியாயமற்ற போரை நிறுத்த வேண்டும்: ஒமா் அப்துல்லா

ஃபரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தால் ஜம்மு-காஷ்மீருக்கு கடும் பாதிப்பு: முதல்வா் ஒமா் அப்துல்லா!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


