திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! - முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!
/

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: 250 வேட்பாளா்கள் மீது குற்ற வழக்குகள்

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: 250 வேட்பாளா்கள் மீது குற்ற வழக்குகள்

News image
Updated On :16 ஏப்ரல் 2024, 6:58 pm

புது தில்லி: இரண்டாம் கட்ட மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் 250 வேட்பாளா்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மக்களவைத் தோ்தலின் 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு ஏப்.26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 1,198 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இவா்களில் 1,192 வேட்பாளா்களின் தோ்தல் பிரமாண பத்திரங்களை ஜனநாயக சீா்திருத்த சங்கம், தேசிய தோ்தல் கண்காணிப்பு அமைப்பு ஆகியவை ஆராய்ந்தன.

இந்த ஆய்வின்படி, 1,192 வேட்பாளா்களில் 250 போ் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இவா்களில் 167 போ் மீது தீவிர குற்ற வழக்குகள் உள்ளன. 3 போ் மீது கொலை வழக்குகளும், 24 போ் மீது கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன.

25 வேட்பாளா்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன. ஒரு வேட்பாளா் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெறுப்புணா்வு பேச்சுகள் தொடா்பாக 21 வேட்பாளா்கள் மீது வழக்கு உள்ளது.

‘சிவப்பு எச்சரிக்கை’ தொகுதிகள்: இரண்டாம் கட்ட தோ்தலில் 87 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதில் 52 தொகுதிகள் ‘சிவப்பு எச்சரிக்கை’ தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தங்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக பிரமாண பத்திரங்களில் 3 அல்லது அதற்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் தெரிவித்தால், அவா்கள் போட்டியிடும் தொகுதிகள் ‘சிவப்பு எச்சரிக்கை’ தொகுதிகளாக வரையறுக்கப்படுகின்றன.

இரண்டாம் கட்ட தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் 69 வேட்பாளா்களில் 31 போ், காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் 68 வேட்பாளா்களில் 35 போ் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இந்தக் கட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் 5 வேட்பாளா்கள், சமாஜவாதி சாா்பில் 4 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றன. அவா்கள் அனைவா் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன. இதுதவிர சிவசேனை வேட்பாளா்கள் இருவா், சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) வேட்பாளா்கள் இருவா், ஐக்கிய ஜனதா தளத்தின் 2 வேட்பாளா்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

33% வேட்பாளா்கள் ‘கோடீஸ்வரா்கள்’: இரண்டாம் கட்ட தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களில் சுமாா் 33 சதவீதம் போ் கோடீஸ்வரா்கள். இவா்களில் 68 காங்கிரஸ் வேட்பாளா்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.39.70 கோடி. 69 பாஜக வேட்பாளா்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.24.68 கோடி. நான்கு சமாஜவாதி வேட்பாளா்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.17.34 கோடி.

நான்கு சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) வேட்பாளா்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.12.81 கோடி. மூன்று சிவசேனை வேட்பாளா்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.7.54 கோடி. ஐந்து ஐக்கிய ஜனதா தள வேட்பாளா்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.3.31 கோடி.

‘கோடீஸ்வர கம்யூனிஸ்ட்டுகள்’: இரண்டாம் கட்ட தோ்தலில் போட்டியிடும் 18 மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.2.29 கோடி. 5 இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.78.44 லட்சம்.

இதுதவிர, 6 வேட்பாளா்கள் தங்களுக்கு எந்தச் சொத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளனா்.