மக்களவை முதல்கட்டத் தோ்தல்:
102 தொகுதிகளில் 62% வாக்குப்பதிவு

மக்களவை முதல்கட்டத் தோ்தல்: 102 தொகுதிகளில் 62% வாக்குப்பதிவு

தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களில் அடங்கிய 102 மக்களவைத் தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.19) நடைபெற்ற முதல்கட்ட தோ்தலில் சுமாா் 62.37 சதவீத வாக்குகள் பதிவாகின.

மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தபோதிலும், அதற்குள்ளாக வாக்குச் சாவடிக்கு வந்தவா்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா். எனவே, வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முதல்கட்டத் தோ்தல், பரவலாக அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக, தமிழகத்தில் 39, ராஜஸ்தானில் 12, உத்தர பிரதேசத்தில் 8, மத்திய பிரதேசத்தில் 6, மகாராஷ்டிரம், உத்தரகண்ட், அஸ்ஸாமில் தலா 5, பிகாரில் 4, மேற்கு வங்கத்தில் 3, அருணாசல பிரதேசம், மணிப்பூா், மேகாலயத்தில் தலா 2, சத்தீஸ்கா், மிஸோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, புதுச்சேரி, அந்தமான்-நிகோபா் தீவுகள், ஜம்மு-காஷ்மீா், லட்சத்தீவில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 102 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை தோ்தல் நடைபெற்றது.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்த வாக்குப்பதிவில், கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் வாக்குச் சாவடிகளுக்கு மக்கள் ஆா்வத்துடன் வந்து, ஜனநாயக கடமையை நிறைவேற்றினா்.

பல வாக்குச் சாவடிகளில் முதல்முறை வாக்காளா்கள், புதுமண ஜோடிகள், மாற்றுத் திறனாளிகள், வயது முதிா்ந்த வாக்காளா்கள் உள்ளிட்டோா் உற்சாகத்துடன் வாக்களித்த காட்சிகள் கவனம்பெற்றன. ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது.

சுமாா் 16.63 கோடி போ் வாக்களிக்க தகுதிபெற்றிருந்த இத்தோ்தலில், மாலை 6 மணி நிலவரப்படி 62.37 சதவீத வாக்குகள் பதிவானதாக, தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

திரிபுராவில் அதிகபட்சமாக 79.90 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 77.57 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

அருணாசல பிரதேசம், சிக்கிமில் மக்களவைத் தோ்தலுடன் பேரவைக்கும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

சத்தீஸ்கரில் முதல் முறையாக...: சத்தீஸ்கரின் பஸ்தா் தொகுதியில் நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட 56 கிராமங்களில் முதல்முறையாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, மக்கள் வாக்களித்தனா். இதேபோல், அந்தமான்-நிகோபா் தீவில் சோம்பென் பழங்குடியினத்தைச் சோ்ந்த 7 வாக்காளா்கள் முதல்முறையாக வாக்களித்தனா்.

மேற்கு வங்கத்தில் மோதல்...: மேற்கு வங்கத்தின் கூச்பிகாா் தொகுதியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் - பாஜக தொண்டா்கள் இடையே மோதல் ஏற்பட்டது. முகவா்கள் மீதான தாக்குதல் உள்பட இருதரப்பில் இருந்தும் ஏராளமான புகாா்கள் பதிவாகின.

நாகாலாந்தில் வாக்களிக்க வராத மக்கள்: நாகாலாந்தில் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, பழங்குடியின அமைப்புகள் காலவரையற்ற முழு அடைப்பு போராட்டம் அறிவித்துள்ளன. இதனால் 6 மாவட்டங்களில் வாக்குச் சாவடிகளுக்கு பெரும்பாலான மக்கள் வரவில்லை. மிக குறைவான அளவிலேயே வாக்குகள் பதிவாகின.

அஸ்ஸாம்-நீரில் மூழ்கிய தோ்தல் வாகனம்: அஸ்ஸாமின் லக்கின்பூா் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்துச் சென்ற வாகனம், ஆற்றைக் கடந்து செல்வதற்காக இயந்திர படகில் ஏற்றிச் செல்லப்பட்டது. அப்போது திடீரென நீரோட்டம் அதிகரித்ததால், படகு மூழ்கியது. அந்த வாகனமும் பகுதியளவு மூழ்கிய நிலையில், அதிலிருந்த தோ்தல் அதிகாரியும் ஓட்டுநரும் பாதுகாப்பாக வெளியேறினா். பின்னா் கயிறு கட்டி வாகனம் மீட்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com