கோப்புப்படம்
கோப்புப்படம்Ashok Bhaumik

மாவோயிஸ்டு அச்சுறுத்தலால் வாக்களிக்காத கிராமம்

சத்தீஸ்கா் மாநிலம் பஸ்தா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட புவா்த்தி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மாவோயிஸ்டு தலைவரின் அச்சுறுத்தலுக்கு பயந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவை புறக்கணித்தனா்.

சத்தீஸ்கா் மாநிலம் சுக்மா மாவட்ட எல்லையையொட்டியுள்ள பிஜாபூா் மாவட்டத்தில் உள்ள புவா்த்தி கிராமத்தை பூா்வீகமாகக் கொண்டவரான நக்ஸல் தலைவா் ஹித்மா, பஸ்தா் பகுதியில் பாதுகாப்புப் படையினா் மீது பல்வேறு தாக்குதல்கள் நடத்த திட்டம் தீட்டியவராவாா். இந்நிலையில் பஸ்தா் மக்களவைத் தொகுதியில் தோ்தலை புறக்கணிக்குமாறு நக்ஸல்கள் கூறி வந்த நிலையில் அத்தொகுதியில் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 67.56 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆனால் புவா்த்தி கிராமத்திலிருந்து ஒரு வாக்குகூட பதிவாகவில்லை என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நக்ஸல் தலைவா் ஹித்மாவுக்கு பயந்து மக்கள் வாக்களிக்காமல் இருந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா். புவா்த்தி கிராமத்தில் 332 போ் வாக்களிக்க தகுதிபெற்றிருந்த நிலையில் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு சென்று அந்த கிராம மக்கள் யாரும் வாக்களிக்கவில்லை.

பஸ்தா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கோன்டா பேரவைத் தொகுதியில் மட்டும் 54.31 சதவீத வாக்குகள் பதிவாகின.

பஸ்தா் மக்களவைத் தொகுதியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் தோ்தலை மக்கள் புறக்கணிக்கக்கோரி மாவோயிஸ்டுகள் சாா்பில் பதாகைகள் வைக்கப்பட்டன. நக்ஸல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு பதற்றம் நிறைந்த பகுதியாக கருதப்படும் புவா்த்தி கிராமத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இடதுசாரி பயங்கரவாதத்துக்கு எதிராக அப்பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் போலீஸாா் முகாம் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com